இந்திரா உணவகங்கள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு மாநகராட்சி சார்பில் இந்திரா உணவகங்கள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

பெங்களூரு மாநகராட்சி சார்பில் இந்திரா உணவகங்கள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய மலிவு விலையில் உணவு வழங்கும் 'அம்மா உணவகம்' திட்டம் பெரிதும் வரவேற்பு பெற்றது. இதுபோன்ற மலிவு விலையில் உணவை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்திலும் கோரிக்கைகள் எழுந்தன.
ஆகஸ்ட் 15 முதல்...: இதையடுத்து, 2017- 18- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட 198 வார்டுகளிலும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா உணவகங்களை தொடங்கப் போவதாக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.100கோடி நிதியை ஒதுக்கியிருந்தார். இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15- ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் 198 இடங்களில்...: வார்டுக்கு ஒரு இந்திரா உணவகம் என வீதம் 198 உணவகங்களும், 37 சமையல்கூடங்களும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஒருசில இடங்களில் இடம் சரியாக அமையாததால் அதற்கான தேடுதல் வேட்டையும்நடக்கிறது.
தமிழகத்தை போலவே, ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட கட்டுமானப் பொருள்களின் உதவியால் உணவகம், சமையல் கூடங்களை அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளன.
வெளியூரில் இருந்து வருவோருக்கும் பயன்படும் வகையில்...
இந்திரா உணவகத்தில் காலை சிற்றுண்டி ரூ.5, மதிய உணவு -  இரவு உணவு தலா ரூ.10- க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்து பெங்களூருக்கு வருகைதருவோருக்கும் பயன்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரூ.2- க்கு தேநீர், காபி: தினமும் காலைசிற்றுண்டியாக இட்லி, சட்னி வழங்கப்படவிருக்கிறது. இதுதவிர, உப்புமா, பொங்கல், கத்திரிக்காய் சாதம்(வாங்கிபாத்), தக்காளி சாதம் ஆகியன தரப்படுகிறது. இதன் விலை ரூ.5 ஆகும். மதியம், இரவு உணவாக அரிசி, சாம்பார், தெளிச்சாறு (ரசம்), சப்பாத்தி, பொரியல் ரூ.10- க்கு வழங்கப்படுகிறது. இதுதவிர, தயிர் சாதம் போன்ற அரிசியால் செய்த வெவ்வேறு உணவு வகைகளும் ரூ.10- க்கு விற்கப்படவிருக்கிறது. கர்நாடக பால் கூட்டமைப்பின் உதவியுடன் தேநீர், காபி உள்ளிட்டவைகளை ரூ.2- க்கு விற்கவும், இனிப்பு வகைகளை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி கூறியது:-
இந்திரா உணவகம் திட்டத்தை இனியும் தாமதிக்கவிரும்பவில்லை. சுதந்திர தினமானஆகஸ்ட் 15- ஆம் தேதி இந்திரா உணவகம் திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கவிருக்கிறார். நகர்ப்புற ஏழை மக்களுக்கு தரமான உணவை வழங்க விரும்புகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் செயற்பொறியாளர் நந்தீஷ் கூறியது: -
ஒவ்வொரு வார்டுகளிலும் 40- க்கு 40 அடி பரப்பில் இந்திரா உணவகங்களை அமைக்கவிருக்கிறோம். சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒன்று அல்லது இரண்டு சமையல் கூடங்களை அமைக்கவுள்ளோம். இதன்பரப்பு 60- க்கு 40 அடியாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் சமையல் கூடங்கள், உணவகங்களுக்காகவே சிறப்பாகத் தயாரிக்கப்படும் முன்வடிவமைப்பு காரை சுவர்கள், கூரைகளை வாங்கி வந்திருக்கிறோம். இந்த நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக ஒரு உணவகம், சமையல் கூடத்தை அமைக்க 2 நாள்கள் போதுமானதாகும். 198 உணவகங்கள், 37 சமையல் கூடங்களை கட்டமைக்க 35- 40நாள்கள் எடுத்துக்கொள்ளவிருக்கிறோம். இந்தக் கட்டுமானங்கள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்.
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து உணவருந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கைகழுவுமிடம், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய், சமையல் எரிவாயு வைப்பிடம், மாவு அரைக்குமிடம், சமைக்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்தக் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளோம். ஜூலை 6- ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளியை யாருக்கு வழங்குவது என்பதை இறுதி செய்வோம். மேலும் உணவகம், சமையல் கூடங்களில் தூய்மையை பராமரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி கேட்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்திரா உணவகம் செயல்படவுள்ள நேரம்
சிற்றுண்டி: காலை 7.30 மணி முதல் காலை 10 மணிவரை
மதிய உணவு: நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
இரவு உணவு: இரவு 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை
அம்மா உணவக விலை பட்டியல்
இட்லி- ரூ.1
பொங்கல் - ரூ.5
சாம்பார் சாதம்- ரூ.5
தயிர் சாதம்- ரூ.3
கருவேப்பிலை சாதம்- ரூ.5
எலுமிச்சை சாதம்- ரூ.5
சப்பாத்தி- ரூ.3
இந்திரா உணவக விலை பட்டியல்
3 இட்லிகள், சட்னி- ரூ.5
உப்புமா/பொங்கல்/புளியோதரை/கத்திரிக்காய் சாதம்/தக்காளி சாதம்-  ரூ.5
சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி- கூட்டு, புலாவ்- ரூ.10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com