கெம்பே கெளடா பிறந்த நாள்: பெங்களூரில் இன்று கொண்டாட்டம்

பெங்களூரு மாநகரை கட்டமைத்த மன்னர் கெம்பே கெளடா பிறந்த நாள்விழாவை பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படவிருப்பதாக கர்நாடக ஒக்கலிகர் சஙகத் தலைவர்

பெங்களூரு மாநகரை கட்டமைத்த மன்னர் கெம்பே கெளடா பிறந்த நாள்விழாவை பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படவிருப்பதாக கர்நாடக ஒக்கலிகர் சஙகத் தலைவர் ஜி.என்.பெட்டே கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம்கூறியது:-
கெம்பே கெளடாவின் பிறந்த நாள்விழாவை கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பில் முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
கர்நாடக ஒக்கலிகர் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் கெம்பே கெளடா அமைத்த நான்கு கோபுரங்களில் இருந்து ஊர்வலம் தொடக்கிவைக்கப்படுகிறது. இந்த ஊர்வலம் சுதந்திரப் பூங்காவை அடையும். அங்கு விழா நடைபெறும். இதன்படி, காலை 7 மணிக்கு கெம்பாம்புதி ஏரி எல்லை கோபுரத்தில் இருந்து புறப்படும் ஊர்வலத்தை மத்திய அமைச்சர் அனந்த்குமார், வீட்டு வசதித் துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, அல்சூர் எல்லை கோபுரத்தில் இருந்து புறப்படும் ஊர்வலத்தை மாநில அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், லால்பாக்பூங்கா எல்லை கோபுரத்தில் இருந்து புறப்படும் ஊர்வலத்தை மத்திய அமைச்சர் அனந்த்குமார், அமைச்சர் ராமலிங்கரெட்டி ஆகியோர் தொடக்கிவைக்கிறார்கள். ஊர்வலத்தில் நடிகர்கள் சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார், ஜக்கேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
பெங்களூரு விதானசெளதாவில் காலை 11.30 மணிக்கு நடக்கவிருக்கும் விழாவை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், டி.வி.சதானந்த கெளடா, பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட், மேலவைத் தலைவர்டி.எச்.சங்கரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து
கொள்கிறார்கள்.
கெம்பே கெளடாவின் பிறந்தநாளை தமிழக அரசும் கொண்டாடுகிறது. அங்கு ஷகிரியில் கெம்பேகெளடா நினைவுபூங்கா அமைக்க தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. இதேபோல கர்நாடகத்திலும் ஒருஏக்கர் நிலத்தில் கெம்பேகெளடா நினைவிடம் அமைக்க வேண்டும்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தை பிரிக்கும்போது ஒரு பல்கலைக்கழகத்துக்கு கெம்பே கெளடா பெயரை சூட்டவேண்டும். மெட்ரோ ரயில் சேவைக்கும் கெம்பேகெளடா பெயரை சூட்ட வேண்டும். கெம்பேகெளடா பிறந்த அவதி கிராமத்தில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
கெம்பேகெளடாவின் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். கெம்பேகெளடா பன்னாட்டு விமானநிலையத்தின் முன்பகுதியில் கெம்பேகெளடா சிலை அமைக்க வேண்டும். கெம்பேகெளடா அமைத்த எல்லைகோபுரங்கள், ஏரிகளை சீராகப் பராமரிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com