பாஜக வேட்பாளர்களைக் கண்டறிய கருத்துக்கணிப்பு: எடியூரப்பா

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக நிறுத்த வெற்றி வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிய கருத்துக் கணிப்பு நடத்தப்படும்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக நிறுத்த வெற்றி வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிய கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:-
கர்நாடக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளோம். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு வெற்றி வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிய கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.
தொண்டர்களின் பணியை முடித்துகொண்டு திரும்பியதும் மக்களின் உணர்வுகளை ஓரளவு கணிக்க முடியும். அதன்பிறகு கட்சிக்கு எது சரியாக இருக்கும் என்பதை கண்டறிய, தனியார் நிறுவனத்தால் கருத்துக்கணிப்பு நடத்தப்படும். இந்தப் பணி இன்னும் 2 மாதங்களில் தொடங்கும். இதன்படி, பாஜக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் தேர்தலுக்கு ஆறுமாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைத்துகொள்ள விரும்புகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் பேசிவருகிறார்கள். அது யார் என்பதை தற்போது கூற இயலாது. பாஜகவில் நல்ல வேட்பாளர்கள் இல்லாத இடங்களில் அதுபோன்றவர்களை பயன்படுத்திகொள்ளவும் முடிவுசெய்துள்ளோம்.
எல்லோரையும் சேர்த்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என்பது நிதர்சனம். எனவே, எங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பாஜகவில் சேர்த்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்போம்.
ஆளுங்கட்சியான காங்கிரஸில் பல்வேறு நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக நடந்துவருவதை காணும்போது சட்டப்பேரவைக்கு டிசம்பரில் தேர்தல் நடக்கலாம் என்று எண்ணுகிறேன். டிசம்பரில் தேர்தல் நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
வறட்சி நிலை மேலும் மோசமடையும் என்று உணர்ந்துள்ள காங்கிரஸ், முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தும்போது கர்நாடக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தினால் அது பாஜகவுக்கு சாதகமாகவே முடியும்.
காங்கிரஸ் அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடியால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதர மாநில அரசுகள் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்தால், கர்நாடக அரசு ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது.
224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடும். அறுதிபெரும்பான்மை பலத்துடன் பாஜக அட்சி அமைக்கும். பாஜகவில் உள்கட்சிபூசல் எதுவுமில்லை. அனைவரும் ஒன்றுபட்டு உழைத்துவருகிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒருசில துறைகளின் அலுவலகங்களை பெலகாவியில் உள்ள சுவர்ண விதானசெளதாவுக்கு மாற்றுவோம். அதன்மூலம் வடக்கு- தெற்கு மாவட்டங்களுக்கு இடையிலான பாரபட்சத்தைத் தடுப்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com