காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதிருப்தியளிக்கிறது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு அதிருப்தியளிக்கிறது என்றார் அந்த மாநில முதல்வர் சித்தராமையா.
 உலக தண்ணீர் நாளை முன்னிட்டு, பெங்களூரு விதான செüதா முன் புதன்கிழமை நடைபெற்ற "தண்ணீரைச் சேமித்து, பெங்களூரைக் காப்பாற்றுங்கள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து சித்தராமையா பேசியது:
 மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களுக்கும் மிகவும் அத்தியாவசியத் தேவை தண்ணீர். குடிப்பதற்கு மட்டுமல்ல, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கும் தண்ணீர் மிகவும் தேவையானதாக இருக்கிறது.
 எனவே, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா, இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவுநீரைச் சுத்திகரித்து, தண்ணீர் தேவையை நிறைவு செய்கின்றனர். பெங்களூரில் தினமும் 1,200 லட்சம் லிட்டர் முதல் 1,300 லட்சம் லிட்டர் வரையிலான கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
 இந்த தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து பயன்படுத்துவது குறித்து பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஒருசில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
 கழிவுநீரைச் சுத்திகரித்து, அதை பிற தேவைகளுக்குப் பயன்படுத்தினால், தற்போது கிடைக்கும் தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநிலத்தில் நிகழாண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கே மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், காவிரி நதிப் படுகையில் போதிய தண்ணீர் இல்லாததால் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
 இதுபோன்ற சூழலில் காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நமக்கு அதிருப்தியைத் தந்துள்ளதோடு, நடைமுறை சாத்தியமில்லாத உத்தரவாகவும் இருக்கிறது. எனவே, நீரின் மகத்துவத்தை அறிந்து, அதை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அவசியத்துக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
 உலக தண்ணீர் நாள் விழாவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தண்ணீர் மறுசுழற்சி குறித்த உறுதிமொழியை ஏற்றனர். விழாவில், நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மகேந்திர ஜெயின், முதல்வரின் முதன்மைச் செயலாளரும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவருமான துஷார் கிரிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com