இரண்டாமாண்டு பியூசி தேர்வு: மறு மதிப்பீடு, மறுக் கூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published on : 20th May 2017 07:13 AM | அ+அ அ- |
இரண்டாமாண்டு பியூசி தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டல், நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இரண்டாமாண்டு பியூசி தேர்வில் கிடைத்துள்ள மதிப்பெண்கள் திருப்தியாக இல்லாவிட்டால், தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டல், நகல் பெறுவதற்கு விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
விடைத்தாள்களின் நகல்களைப் பெற்று மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்கள், மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விண்ணப்பிக்கும் கடைசிதேதியை மே 29-ஆம் தேதிவரைநீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல்பெறும் தேதியை மே 19-இல் இருந்து மே 27-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல்பெற ஒருபாடத்திற்கு ரூ.400, மறுமதிப்பீடுக்கு ஒருபாடத்திற்கு ரூ.1,260, மறுக்கூட்டலுக்கு கட்டணம் எதுவுமில்லை. விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுக்கூட்டலுக்கான விண்ணப்பங்களை எல்லா பியூ கல்லூரிகளிலும், பெங்களூருவில் உள்ள பெங்களூருஒன் மையங்களிலும், பெலகாவி, ஹூப்பள்ளி, மைசூரு, மங்களூரு, தும்கூரு, தாவணகெரே,பெல்லாரி, கலபுர்கி, சிவமொக்காவில் உள்ள கர்நாடகஒன் மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, www.bangaloreone.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.pue.kar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, அரசு கருவூலத்தில் கட்டணம் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டுடன் விண்ணப்பங்களை துணை இயக்குநர்(தேர்வு), பியூ கல்வித்துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-560012 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23083900 என்ற தொலைபேசியில் அணுகலாம்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.