கர்நாடகத்தில் கனமழைக்கு 2 பேர் சாவு: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒப்பந்ததாரர்

கர்நாடகத்தில் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு தாத்தா, பேரன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகத்தில் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு தாத்தா, பேரன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் ஒப்பந்ததாரர் அடித்து செல்லப்பட்டார்.
 கர்நாடகத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் நந்தினிலேஅவுட் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
 150-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன: மேலும், மழைக்கு நாகவரா, ராஜ்குமார்சாலை, மல்லேஸ்வரம், பல்லாரி சாலை, கத்ரிகுப்பே, சுமனஹள்ளி, நாகர்பாவி, விஜயநகர், லக்கெரே, ஹனுமந்தநகர், நந்தினிலேஅவுட், ராஜாஜிநகர், ஜாலஹள்ளி, கே.ஆர்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தது. ராஜாஜிநகர் முதல் பிளாக்கில் ஓரியன் வணிகவளாகத்தின் அருகே 200-க்கும் அதிகமான கிளிகள் உயிரிழந்தன. மழையால் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒப்பந்ததாரர்: இதில், நந்தினிலேஅவுட் ராஜகால்வாயில் ஜேசிபி இயந்திரம் மூலம் வெள்ளப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சாந்தகுமார் (24), வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும்பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
 மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பார்வையிட்டார். அப்போது சாந்தகுமாரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். சாந்தகுமார் உயிர் இழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தாத்தா- பேரன் சாவு: கல்புர்கி மாவட்டம் பானேகம்பா கிராமத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளிடையே சிக்கி முதியவர் சரணப்பா (65), அவரது பேரன் பிரசன்னா கெüதம் (3) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com