பெங்களூரு மாநகராட்சியில் ரூ.815 கோடி சொத்து வரி வசூல்

பெங்களூரு மாநகராட்சியில் ரூ.815 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிதிநிலைக் குழுத் தலைவர் எம்.கே.குணசேகர் தெரிவித்தார்.

பெங்களூரு மாநகராட்சியில் ரூ.815 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிதிநிலைக் குழுத் தலைவர் எம்.கே.குணசேகர் தெரிவித்தார்.
 இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 பெங்களூரு மாநகராட்சி சார்பில் 2017-18-ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூல் பணி நடைபெற்று வருகிறது. சொத்து வரியில் 5 சத தள்ளுபடி வழங்க இம்மாதம் 31-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் சொத்து வரியாக ரூ.815 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் சொத்து வரியாக ரூ.610 கோடி வசூலாகியிருந்தது.
 நிகழ் நிதியாண்டில் சொத்து வரி வசூல் திருப்திகரமாக உள்ளது. ரூ.815 கோடி தவிர, ரூ.222 கோடி மதிப்பில் சொத்துவரி செலுத்த சொத்து உரிமையாளர்கள் செலுத்துச்சீட்டு பெற்றுச் சென்றுள்ளனர்.
 இதை வங்கிக் கணக்கில் செலுத்தினால், சொத்து வரி வசூல் ரூ.1037 கோடியாக உயரும். இணையதளம் மூலம் 3,38,858, செலுத்துச்சீட்டு மூலம் 4,35,555 சொத்து உரிமையாளர்கள் என மொத்தம் 7.73 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தியுள்ளனர்.
 இம்மாதம் 31-ஆம் தேதி வரை சொத்து வரி செலுத்தினால் 5 சதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 ஜூன் 1-ஆம் தேதி முதல் சொத்து வரியைச் செலுத்தினால் வரி தள்ளுபடி இருக்காது. எனவே, மே 31-ஆம் தேதிக்குள் மேலும் பலர் ரூ.150 கோடி அளவுக்கு சொத்துவரி செலுத்தினால், இம்மாத இறுதியில் ரூ.1200 கோடி சொத்து வரி வசூலிக்க வாய்ப்புள்ளது என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com