தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ஆடைகள் தீக்கிரை
By DIN | Published on : 14th November 2017 08:40 AM | அ+அ அ- |
தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தீக்கிரையானது.
பெங்களூரு குமாரசாமி லே அவுட் கோனனகுன்டே கிராஸில் தனியாருக்குச் சொந்தமான ஆயத்த ஆடை தொழிற்சாலை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 வரை அரை நாள் தொழிலாளர்கள் பணி செய்து விட்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில், இரவு 10 மணியளவில் கீழ்தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து காவலாளி அளித்த தகவலின்பேரில் 22 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மாடிகளுக்கும் பரவிய தீயை போராடி, திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் அணைத்தனர்.
தீ விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் இருந்த ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து தீக்கிரையானது.
இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.