பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: முதல்வர் சித்தராமையா அறிவுரை

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.
பெலகாவியில் உள்ள சுவர்ண விதான செளதாவில் புதன்கிழமை காங்கிரஸ் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது.  காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர்,  செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ்,  எஸ்.ஆர்.பாட்டீல், அமைச்சர்கள் டி.பி.ஜெயசந்திரா, காகோடு திம்மப்பா உள்பட கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில்,  சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயாவின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி வெளிப்படுத்தினர்.  இதைத் தொடர்ந்து,  முதல்வர் சித்தராமையா பேசியது:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால்,  பாஜக, மஜதவினர் காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.  அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் விவகாரத்தில் பாஜகவினர் அரசியல் நடத்தி வருகிறார்கள்.  பாஜகவின் மத்திய அமைச்சர்கள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனாலும்,   அரசியல் லாபங்களுக்காக டிஎஸ்பி கணபதி தற்கொலை விவகாரத்தில் கே.ஜே.ஜார்ஜை பதவி விலக கோரி சட்டப்பேரவையை முடக்க பாஜகவினர் முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்,  சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒருசில எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காதது சரியல்ல.  கூட்டத் தொடர் முழுவதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று,  பாஜக, மஜதவினரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதிலளிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சட்டப்பேரவையைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள்முனைந்துள்ளன.  அதற்கு இடமளிக்காத வகையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையில் நமது எம்எல்ஏக்கள் ஆர்வமாகப் பங்கேற்க வேண்டும்.
பாஜகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்,  முறைகேடுகள், முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேச வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com