அனைத்து சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கு அரசு பாடுபடும்: முதல்வர் சித்தராமையா

அனைத்து சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும் என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

அனைத்து சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும் என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
 பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற வால்மீகி பிறந்த நாள் விழாவைத் தொடக்கிவைத்து, 2017-ஆம் ஆண்டுக்கான வால்மீகி விருதை முன்னாள் அமைச்சர் திப்பேசாமிக்கு வழங்கி அவர் பேசியது:
 எனது தலைமையிலான அரசு சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கும் அரசு உறுதியாகப் பாடுபடும்.
 ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்காகவே பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மஹரிஷி வால்மீகி, உலகின் தலைசிறந்த இலக்கியவாதியாவார். வால்மீகி எழுதியுள்ள இராமாயண காவியம் உலகம் முழுவதும் போற்றப்படும் இலக்கியமாக உள்ளது.
 ராமராஜ்யத்தை கட்டமைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இராமாயணத்தை வால்மீகி படைத்திருக்க வேண்டும். ராமராஜ்யத்தை அமைப்பதாகக் கூறும் ஒருசிலர் சமுதாயங்கள், மதங்களுக்கு இடையே கலவரங்களைத் தூண்டி அதில் அரசியல் லாபம் பெற முயற்சித்து வருகிறார்கள். இதுபோன்ற சுயநல அரசியல் அமைப்புகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
 முன்னதாக, விழாவுக்கு தலைமையேற்று சமூக நலத் துறைஅமைச்சர் எச்.ஆஞ்சநேயா பேசியது: வால்மீகி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தனி ஆராய்ச்சி மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக 10 ஏக்கர் நிலத்தை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். இங்கு பழங்குடியினர் மாளிகையும் அமைக்கப்படும்.
 இம் மையத்தில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கும் திட்டங்கள் வகுக்கப்படும். மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க அரசு ஆர்வமாக உள்ளது என்றார்.
 விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட், மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com