கர்நாடகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோரகர்நாடகத்தில்பரவலாகவும், வடகர்நாடகத்தின் உள்பகுதிகளின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா, மண்டியா மாவட்டத்தின் மத்தூரில் தலா 60 மி.மீ, மண்டியா மாவட்டத்தின் பசரலு, மண்டியா,பெங்களூரு நகர மாவட்டத்தின் ஹெசரகட்டா, பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நெலமங்களா, தாவணகெரே மாவட்டத்தின் சென்னகிரியில் தலா 40 மி.மீ பதிவாகியுள்ளது.
 வானிலை முன்னறிவிப்பு
 அக்.6 முதல் 10-ஆம் தேதி வரை தென்கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, கடலோர கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடகர்நாடகத்தின் சில பகுதிகளில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கர்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 மீனவர்களுக்கு எச்சரிக்கை
 தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்றுள்ளதால், கர்நாடகத்தின் கடலோரப்பகுதிகளில் தென்மேற்கு முதல் மேற்குநோக்கி மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. எனவே, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
 அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 29 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 பெங்களூரில் தொடர் மழை
 பெங்களூரில் 3 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 மழையால் பல்வேறு இடங்களில் 20-க்கும் அதிகமான மரங்கள் விழுந்தன, ஒருசில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன.
 காந்திநகர், வில்சன்கார்டன், ஜெயநகர், அல்சூர், ரிச்மண்ட்டவுன், சாந்திநகர், கோரமங்களா, கம்மனஹள்ளி, சிவாஜிநகர், திலக்நகர், அசோக்நகர், சோமேஸ்வரநகர், பனசங்கரி, ஜே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
 வீடுகளில் வெள்ளம் புகுந்தது
 பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், பொம்மசந்திரா, கிருஷ்ணராஜபுரம் போன்ற ஒருசில பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளில் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து, அடைக்கலம் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. மழைநீரை வீட்டில் இருந்து வெளியேற்றவும் பல முயற்சி மேற்கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com