அக்.25-இல் விதானசெளதா வைர விழா

பெங்களூரு விதான செளதா வைர விழா அக்.25-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.

பெங்களூரு விதான செளதா வைர விழா அக்.25-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.
பெங்களூரில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் 1956-ஆம் ஆண்டு பிரமாண்டமாக கட்டப்பட்ட விதான செளதா கட்டடத்தில் கர்நாடக சட்டப்பேரவை, சட்ட மேலவை, தலைமைச்செயலகம் செயல்பட்டுவருகிறது. தமிழரும், அப்போதைய அரசு தலைமைக் கட்டடக் கலை வல்லுநருமான மாணிக்கம் முதலியாரால் திராவிடக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதை நினைவுக்கூரும் வகையில், கட்டடத்தின் வைரவிழா வருகிற அக்.25,26 ஆகியதேதிகளில் பெங்களூரில் நடக்கவிருக்கிறது. வைர விழாவின் நினைவாக அக்.25-ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் சிறப்புவிருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.
அதன்பிறகு, அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் கமருல் இஸ்லாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் மாலை 5 மணிவரைக்கும் கர்நாடகத்தின் வரலாறு, மாநிலம், மொழி, நீர்,நிலம், இயற்கைவளம் குறித்த சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, விதான செளதா கட்டடத்தின் முகப்பில் மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் கர்நாடகமாநிலத்தின் மரபு, கலை, இலக்கியத்தை வெளிப்படுத்தும் கலை விழா நடக்கவிருக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடக்கும் விழாவில் விதான செளதா கட்டுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் முதல்வர்கள் கே.சி.ரெட்டி, கெங்கல்ஹனுமந்தையா, கடிதாள்மஞ்சப்பா ஆகியோரின் குடும்பத்தினர் பாராட்டி கெளரவிக்கப்படுகிறது. இதுதவிர, கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட சாதனையாளர்களுக்கு வாழ்நாள் விருது வழங்கப்படுகிறது. மாலை 7 மணிக்கு விதானசெளதா குறித்த முப்பரிணாமக் காட்சி திரையிடப்படுகிறது.
அக்.26-ஆம் தேதி விதான செளதாவில் காலை 11 மணிக்கு நடக்கும் திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குநர் கிரீஷ் காசரவளி தயாரித்துள்ள 'விதான செளதா கட்டட நிறுவல்' குறும்படம் திரையிடப்படுகிறது. நண்பகல் 12 மணிக்கு திரைப்பட இயக்குநர் டி.என்.சீத்தாராம் தயாரித்துள்ள 'கர்நாடக சட்டப்பேரவை கடந்துவந்த பாதை' என்ற குறும்படம் திரையிடப்படுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு இளம் இயக்குநர் கிஷன் தயாரித்துள்ள 'விதானசெளதா' கட்டடத்தின் முப்பரிணாம குறும்படம் காட்சிப்படுத்தப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு கன்னடம் மற்றும் கலாசாரத்துறை சார்பில் கர்நாடக மாநிலத்தின் மரபு, கலை, இலக்கியத்தை வெளிப்படுத்தும் கலைவிழா, மாலை 7 மணி முதல் ரிக்கிதேஜின் அமைதி உலகம் என்ற இசைநிகழ்ச்சி நடத்தப்படும்.
இதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு விதானசெளதாவின் முப்பரிணாமக் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com