ஜன.1-முதல் மாவட்ட தலைநகரங்களில் "இந்திரா' உணவகம்: கர்நாடக அமைச்சரவையில் முடிவு

கர்நாடகத்தின் அனைத்து மாவட்டம்,  வட்டத் தலைநகரங்களில் ஜன.1-ஆம் தேதி முதல் இந்திரா உணவகத்தைத் தொடங்க அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தின் அனைத்து மாவட்டம்,  வட்டத் தலைநகரங்களில் ஜன.1-ஆம் தேதி முதல் இந்திரா உணவகத்தைத் தொடங்க அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில்  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா,  செய்தியாளர்களிடம் கூறியது: பொருளாதாரத்தில் நலிவுற்ற,   உழைக்கும் மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக பெங்களூரு மாநகராட்சியில் தொடங்கப்பட்ட இந்திரா உணவகங்கள்,  ஜன.1-ஆம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்து மாவட்டம்,   வட்டத் தலைநகரங்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மிகுதியான எண்ணிக்கையில் மக்கள்தொகை இருக்கும் இடங்களில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் இறுதிக்குள் இந்திரா உணவகம் அமைப்பதற்கான இடத்தைக் கண்டறிந்து,  டிசம்பர் இறுதிக்குள் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியை முடிக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மருத்துவமனை,  பேருந்து நிலையம்,  ரயில் நிலையம் அருகில் இந்திரா உணவகங்கள் தொடங்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் 171 நகரங்களில் உள்ள 246 இடங்களில் வரும் ஜன.1-ஆம் தேதி முதல் இந்திரா உணவகங்கள் செயல்படத் தொடங்கும்.  இதற்காக நாளொன்றுக்கு ரூ.29 லட்சம் வீதம் மாதந்தோறும் ரூ.9 கோடி நிதியை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமையல் எரிவாயுத் திட்டம்
பெலகாவியில் நவ.13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு சுவர்ண செளதாவில் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்த அமைச்சரவை அனுமதித்துள்ளது.
மத்திய அரசின் சுடரொளித் திட்டத்தின்(உஜ்வலா) வரம்புக்குள் வரும் பயனாளிகளுக்கு முதல்வரின் எரிவாயுத் திட்டத்தின்கீழ் ரூ.4040 செலவில் இரண்டு அடுப்புகள் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  மாநிலத்தில் 28 லட்சம் பயனாளி குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் அடுப்புகள் வழங்கப்படும் என்றாலும்,  முதல்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு அடுப்புகள் அளிக்கப்படும்.  இந்தத் திட்டத்துக்கு ரூ.1137கோடி விடுவிக்க அமைச்சரவை அனுமதி
அளித்துள்ளது.
இதேபோல, மண்ணெண்ணெயைப் பயன்படுத்திவரும் குடும்பங்களுக்கு இலவசமாக எல்.இ.டி. விளக்குகளை வழங்கவும் அமைச்சரவை சம்மதித்துள்ளது.  சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பழைய 95 அதிநவீன உயிர் காப்புக் கருவிகள், 276 அடிப்படை உயிர் காப்புக் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொள்முதல் செய்ய ரூ.61.78 கோடி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு உதவி
அரசு,  அரசு மானியம் பெறும்,  தனியார் தொழில் பயிற்சி மையங்களில் பயின்றுவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மைசூரு விற்பனை மற்றும் பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் எழுதுபொருள்கள் கொள்முதல் செய்து விநியோகிக்க நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 46 அரசு தொழில் பயிற்சி மையங்களை தரம் உயர்த்த ரூ.20.27 கோடி செலவில் 26 வெவ்வேறு வகையான கருவிகளைக் கொள்முதல் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  அதேபோல, இம் மையங்களில் ரூ.16.30கோடி செலவில் 127 வெவ்வேறு வகையான மின்சார மற்றும் மின்னணுக் கருவிகளைக் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com