புதுச்சேரி-பெங்களூரு இடையே விரைவில் விமான சேவை: புதுவை தலைமைச் செயலாளர் தகவல்

புதுச்சேரி-பெங்களூரு இடையே விரைவில் பயணிகள் விமான சேவை  தொடங்கப்படும் என புதுவை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்தார்.

புதுச்சேரி-பெங்களூரு இடையே விரைவில் பயணிகள் விமான சேவை  தொடங்கப்படும் என புதுவை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் கிரண் பேடிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை தலையிட வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு தற்போது விமான சேவை சிறப்பாக இயங்கி வருகிறது. ஹைதராபாத்-விஜயவாடா வழித்தடத்தில் அனைத்து பயணிகள் இருக்கைகளும் முழுமையாக நிரம்பி விடுகின்றன. விரைவில் பெங்களூரு நகருக்கு விமான சேவையை தொடங்க தனியார் நிறுவனத்திடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தத் திட்டத்தை தவிர்த்து, புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம்.
இதற்காக 100 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். பொதுமக்களும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. நிலத்தைக் கையகப்படுத்தினால் பணத்தை மாநில அரசுதான் தர வேண்டும் என விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுவை அரசு சார்பில் மத்திய அரசு இதற்கான நிதியை வழங்கும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, விமானங்கள் இறங்குவதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை செய்து தந்தால் பெரிய விமானங்களும் வந்து செல்ல முடியும்.
பின்னர், இங்கிருந்து மெட்ரோ நகரங்களுக்கும் விமானங்களை இயக்கலாம். இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசுமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
புதுச்சேரிக்கும்-சென்னை துறைமுகத்துக்கும் இடையே சரக்குப் பெட்டக போக்குவரத்தை கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 2 இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. இதற்காக ரூ.4 கோடி தேவைப்படுகிறது. அந்தத் தொகையை தருமாறு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியிருந்தார்.  மேல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை துறைமுகத்துக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூர்வாரும் இயந்திரமும், நிதியும் விரைவில் கிடைத்து விடும். அதன் பிறகு, புதுச்சேரி துறைமுகம் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் நவீன முறையில் சரக்குப் பெட்டக போக்குவரத்து இரவு நேரங்களில் நடைபெறும். விரைவில் இப்பணி தொடங்கும்.
டெங்கு பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் இருந்து புதுவைக்கு சிகிச்சை பெறுவதற்காக டெங்கு நோயாளிகள் அதிகம் வருகின்றனர். எந்த நிலைமையையும் சமாளிக்க புதுவை அரசு தயாராக உள்ளது.
புதுவை அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், 3 மாதங்களில் சீரடைந்துவிடும். பண மதிப்பிழப்பு, மதுக் கடைகள் இடமாற்றல் உத்தரவு, ஜிஎஸ்டி போன்றவற்றால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி இழப்பை மத்திய அரசு மீண்டும் அளித்து விடும். இதனால் நிதி நிலை சீரடையும்.
அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, எவ்வளவு தொகை என்பது அறிவிக்கப்படும்.
அனைத்து மாநிலங்களிலும் தலைமைச் செயலாளர்கள்தான் தலைமைக் கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ளனர். புதுவை மாநிலம் இந்தியாவில் தான் உள்ளது. தலைமை கண்காணிப்பு அதிகாரியாக எனது பணியை நான் நேர்மையாகச் செய்து வருகிறேன். இதுவரை 3400 புகார்கள் பெறப்பட்டு, 2200 புகார்கள் மீது விசாரணை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் படகு வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி 3 வாரங்களில் அறிக்கை தருமாறு கூறியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் மனோஜ் பரிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com