தேவெ கெளடாவின் அரசியல் பாதை நூல் வெளியீடு

தான் கடந்து வந்த அரசியல் பாதை குறித்த நூலை வெளியிட  முன்னாள் பிரதமர் தேவெ கெளடா திட்டமிட்டுள்ளார்.

தான் கடந்து வந்த அரசியல் பாதை குறித்த நூலை வெளியிட  முன்னாள் பிரதமர் தேவெ கெளடா திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகத்தின் மூத்த அரசியல்வாதி  எச்.டி.தேவெ கெளடா, ஹாசன் மாவட்டத்தின் ஹரதனஹள்ளி கிராமத்தில் இருந்து தில்லி வரை பயணித்து அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பை அலங்கரித்தவர். கர்நாடகத்தின் முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்ததோடு, வரலாற்றில் அழிக்க முடியாத தடங்களைப் பதித்தவர். அரசியலில் தனது ஆரம்பம் முதல் தில்லி அதிகாரமையத்தை கைப்பற்றியது வரையிலான சுவையான நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் எச்.டி.தேவெ கெளடா, அதை தன் வரலாறாக தொகுத்திருக்கிறார்.
சவாலான காலக் கட்டத்தின் இந்தியாவின் பிரதமராகப் பதவிவகித்து ஆற்றியிருக்கும் பல சாதனைகளை தொகுக்கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த தேவெ கெளடா, அந்நூலை அடுத்த நவம்பர் மாதத்தின் இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இந்த நூலில் இந்திய அரசியலில் திருப்பங்களை உருவாக்க காரணமாக அமைந்த பல சுவையான நிகழ்வுகளை பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கர்நாடகத்தில் தனது மகன் எச்.டி.குமாரசாமி காங்கிரஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி, கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்ததற்கான சூழல், பிறகு அந்த கூட்டணி ஆட்சியும் கவிழ்ந்ததற்கான பின்னணி நிகழ்வுகளையும் தேவெ கெளடா தனதுநூலில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, தேவெ கெளடா 11 மாதங்கள் பிரதமராக இருந்தகாலத்தில் செய்த சாதனைகள், எடுத்த முக்கியமான முடிவுகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும், மஜத எம்எல்ஏவுமான ஒய்.எஸ்.வி.தத்தாதொகுத்திருக்கிறார். இவர் தனது மகள் ஷைலஜாவுடன் இணைந்து இந்த நூலை தயாரித்திருக்கிறார்.
இந்த நூலையும் நவம்பர் மாத இறுதியில் வெளியிட  தத்தா திட்டமிட்டிருக்கிறார். இந்த இருநூல்களும் முதலில் கன்னடத்தில் வெளியிடப்படுகிறது. அதன்பிறகு, ஆங்கிலம், ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டதாக அமைந்துள்ளது என்று தத்தா தெரிவித்தார். இந்த இரு நூல்களும் சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com