மகளிர் சுய உதவிக் குழு மூலம் பெங்களூரில் நடமாடும் உணவகம்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெங்களூரில் வரும் நவ.1-ஆம் தேதிமுதல் சோதனை முயற்சியாக நடமாடும் உணவகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெங்களூரில் வரும் நவ.1-ஆம் தேதிமுதல் சோதனை முயற்சியாக நடமாடும் உணவகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில மகளிர் வளர்ச்சிக் கழகத் தலைவர் பாரதி சங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாவட்ட கூட்டமைப்பின் நிர்வாகத்தின்கீழ் நடமாடும் உணவகம் தொடங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி, சோதனைமுயற்சியாக பெங்களூரு நகரம் மற்றும் பெங்களூரு ஊரக மாவட்டங்களில் நவ.1-ஆம் தேதி முதல் நடமாடும் உணவகங்கள் தொடங்கப்படும்.
 இதுதொடர்பாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் அக்.9-ஆம் தேதிமுதல் 3 நாள்கள் நடந்தது. மகளிரிடையே தொழில்முனைப்பாற்றலை ஊக்குவிக்கவும், உணவு தயாரிப்பு முறைகளை தொழில் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் திறனை வளர்த்தெடுக்கவும், சுகாதார பாதுகாப்புக்கான வழிமுறைகளை விளக்கவும் இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே,மாவட்ட சுய உதவிக்குழுக்களின்கூட்டமைப்புக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி நடமாடும் உணவகம் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த நிதியில் வாகனம், சமையல், உணவு தானியங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்வதோடு, நடமாடும் உணவகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறை செலவினங்களையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.
மாவட்டத் தலைநகரங்கள் மட்டுமல்லாது, வட்டத் தலைநகரங்களிலும் நடமாடும் உணவகம் திட்டம் தொடங்கப்படும். இதற்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.  மாதந்தோறும் ரூ.18,500 வீதம் நான்கரை ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான தொடக்க விழா பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் நவ.19-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று திட்டத்தைத் தொடக்கிவைக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com