அரசியல் எதிரிகளால் பலம் பெருகும்: சித்தராமையா

அரசியல் எதிரிகளால் அரசியல் பலம் பெருகும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.

அரசியல் எதிரிகளால் அரசியல் பலம் பெருகும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
மைசூரு  நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில்,  பயனாளிகளுக்கு வீட்டுமனைகளை வழங்கி அவர் பேசியது:-
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் என்னை (சித்தராமையா) தோற்கடிக்க அரசியல் எதிரிகள் ஒன்றாகியுள்ளதும்  ஒருவகையில் நல்லதுதான்.  அவர்களால் அரசியல் பலம்தான் பெருகும். இதுகுறித்து கவலைப்படவில்லை. அவர்களின் கனவு பலிக்காது.   தனிப்பட்டமுறையில் யார் மீதும் கோபமில்லை.  ஆனால், அரசியல் ரீதியாக எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியலில் இவை இயல்பானதாகும்.   
சாமுண்டீஸ்வரி சட்டப் பேரவைத் தொகுதி அரசியல் மறுவாழ்வு அளித்த தொகுதியாகும்.  இந்தத் தொகுதி மக்கள் 5 முறை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.  
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப் பேரவை தேர்தல், அரசியல் வாழ்க்கையின்கடைசித் தேர்தலாகும்.  அதனால் அரசியல் வாழ்க்கையை அளித்த தொகுதியில் இருந்தே போட்டியிடுவேன்.  சாமுண்டீஸ்வரி தொகுதி மக்களின் ஆசி இருப்பதால், அவர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
வீட்டுமனைகள் வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை: மைசூரில் உள்ள நல்ல லேஅவுட்களில் ஒன்றான ஆர்.டி.நகரில் இதுவரை 1683 வீட்டுமனைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  
ஆர்.டி. நகரில் நிகழாண்டின் இறுதிக்குள் 5 ஆயிரம் வீட்டுமனைகள் விநியோகிக்கப்படும்.
வீட்டுமனைகளை ஒதுக்குவதில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  குலுக்கல் முறையில் வீட்டுமனைகள் ஒதுக்கப்படும்.  இதில் அரசியல் தலையீடுஎதுவுமில்லை.
அண்மைக்காலமாக பெய்த பலத்த மழையில் பெங்களூரு தத்தளித்து கொண்டுள்ளது.  ஆனால் மைசூரில் எந்தவொரு தொந்தரவும் ஏற்படவில்லை.  எனவே, மைசூரில் மக்கள் நிம்மதியுடன் வாழலாம்.
மைசூரில் விரைவில் இந்திரா உணவகங்கள்: மைசூரில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 12 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்.   மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்.  கர்நாடகத்தில் 500 இந்திரா உணவகங்களை திறந்து மலிவான விலையில் உணவு வழங்குவோம்.
பட்டினியில்லா கர்நாடகத்தை உருவாக்குவதே காங்கிரஸின் நோக்கமாகும்.  எனவே,  ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மலிவான விலையில் தரமான உணவு வழங்கி வருகிறோம் என்றார் அவர்.
விழாவில்,  அமைச்சர்கள் எச்.சி.மகாதேவப்பா,  தன்வீர்சேட்,  ரோஷன் பெய்க்,  ஆணையத் தலைவர் துருவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com