கர்நாடக அமைச்சர்களின் ஊழல்களை செப்.23-இல் வெளியிடுவேன்: எடியூரப்பா

முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல்களை செப்.23-ஆம் தேதி வெளியிடுவேன் என்று மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்

முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல்களை செப்.23-ஆம் தேதி வெளியிடுவேன் என்று மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதா, விகாஸ் செளதா இடையே உள்ள காந்தி சிலை அருகே ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சட்ட மேலவை உறுப்பினர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த எடியூரப்பா, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:
மாநிலத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர். இதுதொடர்பான ஆதாரத்துடன் உள்ள ஆவணங்கள் என்னிடத்தில் உள்ளன. வரும் 23-ஆம் தேதி அதனை வெளியிடவும் முடிவு செய்துள்ளேன்.
உண்மையிலேயே உரிய ஆதாரங்களுடன் காங்கிரஸாரின் ஊழலை வெளிப்படுத்துவேன். இதனை உணர்ந்துள்ள முதல்வர் சித்தராமையா, ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பல ஆவணங்கள் மாயமாகியுள்ளன. என்றாலும், எனக்கு கிடைத்துள்ள ஒரு சில ஆவணங்களை, மக்களிடம் தெரிவிப்பேன். மேலும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட மேலவையில் உள்ள ஆசிரியர்கள் பிரதிநிதிகள் கடந்த 10 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும், இதனை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்ட மேலவை உறுப்பினர்களை முதல்வர் சித்தராமையா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com