'குழந்தைகளின் பாதுகாப்புக்காக பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்'

பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என கிரிஸ்ப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என கிரிஸ்ப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பெங்களூரு, கப்பன் பூங்காவில் சனிக்கிழமை குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாலியல் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தி கிரிஸ்ப் அமைப்புத் தலைவர் குமார்ஜாகிர்தார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது குமார் ஜாகிர்தார் பேசியது: தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு 336 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல், சுரண்டல், அலட்சியம் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று ஐநா மன்றம் வெளியிட்ட குழந்தை பாதுகாப்பு பிரகடனத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் அங்கம் வகிக்கும் குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன. குழந்தைகளுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதால், அவர்களின் நலனில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பது வேதனையான உண்மை.
குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தை (போக்சோ) தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் நலத் துறையில் இருந்து விடுவித்து குழந்தைகள் நலத்துக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி, அமைச்சரை நியமிக்க வேண்டும்.
கூட்டுக் குடும்ப முறையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com