சமூக விரோதச் செயல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

சமூக விரோதச்செயல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என காவல் துறையினருக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை வழங்கியுள்ளார்.

சமூக விரோதச்செயல்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என காவல் துறையினருக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை வழங்கியுள்ளார்.
பெங்களூரு ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் காவல் பதக்கங்கள் வழங்கும் விழாவுக்கு தலைமையேற்று அவர் பேசியது: சமுதாயத்தில் நிலவும் அமைதி, நிம்மதியை சீர்குலைத்து, மக்களிடையே அச்ச உணர்வை விதைக்க முற்படும் சமூக விரோதிகளிடம் காவல் துறையினர் மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். சமூக விரோதச்செயல்களை முழுமையாக ஒழிப்பதை காவல்துறையினர் கடமையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும். சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுவோரை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும், சமுதாயத்தில் பீதியை உருவாக்க சிலர் தவறுவதில்லை. அதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக காவல் துறையினருக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளன. அந்த பொறுப்புகளை நேர்மையுணர்வோடு அணுகவேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. தற்போது அந்நிலை மாற்றப்பட்டு, பதவி உயர்வு வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் முக்கியமான சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கேற்ப ஊதியத்தை சீர்படுத்தும் பணி நடந்துவருகிறது. காவல்துறையினரின் வீட்டுவசதி, போக்குவரத்து, சுகாதாரம் தொடர்பான கோரிக்கைகளை செயல்படுத்தியுள்ளோம். அண்மைக்காலமாக காட்சி ஊடகங்கள் மிகுந்த விழிப்போடு செயல்பட்டு வருகின்றன. எனவே, கடமை தவறாமல் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் மூன்று ஆண்டுகளாக அளிக்காமல், அவற்றை ஒரேநாளில் ஒன்றாக அளிப்பது சரியல்ல. அடுத்த ஆண்டு முதல் அந்தந்த ஆண்டே குடியரசுத் தலைவர் காவல் பதக்கங்களை அளித்துவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
இவரைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் வஜுபாய்வாலா கூறியது: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருக்க காவல் துறையினர் அக்கறை செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் குந்தகம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். காவல்துறையினர் தங்கள் கடமையை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, காவல் துறை தலைவர் ஆர்.கே.தத்தா, அரசு தலைமைச் செயலர் சுபாஷ்சந்திரகுன்ட்டியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com