பசியில்லா மாநிலத்தை  உருவாக்கவே அன்னபாக்யா திட்டம்:  காங்கிரஸ்

பசியில்லா மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் அன்னபாக்யா, இந்திரா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் செயலாளர் மதன்பாட்டீல் தெரிவித்தார்.

பசியில்லா மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் அன்னபாக்யா, இந்திரா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் செயலாளர் மதன்பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு சி.வி.ராமன் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு அரிசி, வெல்லம், நெய், சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது: 
அனைத்து மொழிகள் பேசுபவர்களும் சகோதரர்களாக இணைந்து வாழும் மாநிலம் என்ற பெருமை கர்நாடகத்தையே சேரும். இங்கு தமிழர்களும், கன்னடர்களும், தெலுங்கர்களும் சகோதரர்களாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகத்தில் சங்கராந்தி என்றும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றும் கொண்டாடப்படுகிறது. 
தைத்திருநாளை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். சி.வி.ராமன் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதிலும் கூலித் தொழிலாளி உள்ளிட்ட ஏழைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை மட்டுமன்றி, மாநிலத்தில் வாழும் அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்பதே முதல்வர் சித்தராமையாவின் நோக்கம். பசிக்கு மட்டுமே ஜாதி, மத, இன, மொழி பேதம் கிடையாது. பசியில்லா மாநிலமாக கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அன்னபாக்யா, இந்திரா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 
முதல்வர் சித்தராமையாவின் வளர்ச்சித் திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. எங்களின் வேண்டுகோளை ஏற்று, பெங்களூரு சி.வி.ராமன் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எம்.சி.மகாதேவப்பா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். 
நிகழ்ச்சியில் சட்ட மேலவை உறுப்பினர் நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜலன்நிகிலி, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com