மகதாயி: கர்நாடகத்தில் ஜன.25-இல் முழு அடைப்பு

மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வலியுறுத்தி, கர்நாடகத்தில் ஜன.25-ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம்

மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வலியுறுத்தி, கர்நாடகத்தில் ஜன.25-ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகம், கோவா மாநிலங்களுக்கு இடையே கடந்த 40 ஆண்டுகளாக நிலவும் மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மோடி தலையிடவேண்டும் என்று கர்நாடக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அனைத்து கட்சி தலைவர்கள் குழுவும் பிரதமர் மோடியைச் சந்தித்து மகதாயி ஆற்றுநீர்ப் பிரச்னையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட மறுத்ததோடு, கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களின் அரசியல் கட்சிகள் சேர்ந்து பிரச்னையை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 
இது கர்நாடக விவசாயிகளிடையே கடும் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரம் குறித்து கோவா மாநிலமுதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடிதம் எழுதினார். அதற்குப் பதிலளித்து மனோகர் பாரிக்கர் எழுதிய கடிதத்தில், "மகதாயி ஆற்றில் இருந்து குடிநீருக்காக தண்ணீரை பகிர்ந்து கொள்ள நடுவர் மன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்' என்று குறிப்பிட்டிருந்தார். இது விவசாயிகளுக்கு திருப்தி அளிக்காததால், விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தவிவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்தன.
இந்த நிலையில், மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு பிரச்னையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்கக் கோரி ஜன.25-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, விவசாயிகள் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, ஜன.27-ஆம் தேதிக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப் போராட்டம் ஜன.25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியது: மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு பிரச்னை கடந்த 40 ஆண்டுகளாக நிலவிவந்தாலும், அதற்கான போராட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமடைந்துள்ளன. இந்த விவகாரத்தில் பாஜகவினர் தினந்தோறும் முரண்பட்ட கருத்துகளைக் கூறி வருகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜன.25-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
இந்த போராட்டத்துக்கு டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், கர்நாடக ரக்ஷனவேதிகே, கன்னட திரையுலகம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஆதரவளித்துள்ளன. ஜன.25-ஆம் தேதி பெங்களூரில் டவுன்ஹாலில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை ஊர்வலம் நடக்கவிருக்கிறது. திரையரங்குகள் மூடியிருக்கும். அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது. ஆட்டோ, வேன்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்தும் இயக்கப்படாது. பாலகம், மருந்தகம், ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. 
ஜன.28-ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூருக்கு வருகிறார். அப்போது, அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும். இப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com