மாநகராட்சி பட்ஜெட்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் மக்களின் அடிப்படை தேவைகளை சேர்ப்பதற்காக கருத்துக் கேட்பு முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் மக்களின் அடிப்படை தேவைகளை சேர்ப்பதற்காக கருத்துக் கேட்பு முகாம் நடத்தப்படுகிறது.
பெங்களூரு மாநகராட்சியின் 2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மாநில பட்ஜெட்டுக்கு பிறகு, தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட் குறித்து மக்களின் கருத்தறிவதற்காக "எனது மாநகரம் எனது பட்ஜெட்' என்ற மக்கள் கருத்துக் கேட்பு முகாமை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை துணை மேயர் பத்மாவதி தொடக்கிவைத்தார். 
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதுகுறித்து துணை மேயர் பத்மாவதி கூறியது: "நமது மாநகரம், நமது பட்ஜெட்' என்ற மக்கள் கருத்துக்கேட்பு முகாம் கடந்தாண்டு தொடங்கப்பட்டதாகும். கடந்தாண்டில் 40 ஆயிரம் பேர் 67,114 கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதில் பெங்களூரு மாநகராட்சி சம்பந்தப்பட்டது மட்டும் 57,197 கருத்துகளாகும். இவற்றில் 12,468 கருத்துகள் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டன. இதில் 34 சதவீதம் தெருவிளக்குகள், 27 சதவீதம் சாலைகள், 21 சதவீதம் சாலையோர சாக்கடைகள் தொடர்பானவையாக இருந்தன. அவற்றை செயல்படுத்த 20 வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 
பொதுமக்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் ரூ.515 கோடி மதிப்பில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. இது மொத்த பட்ஜெட் தொகையில் 8.5 சதவீதமாகும். இந்தத் திட்டத்துக்கு மக்களிடமிருந்த நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
இதைத் தொடர்ந்து, 2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்தும் மக்களிடம் கருத்துக் கேட்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் மையங்கள் தவிர,  w‌w‌w.‌i​c‌h​a‌n‌g‌e‌m​a‌y​c‌i‌t‌y.​c‌o‌m  என்ற இணையதளம் வழியாகவும் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com