விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு வெகுமதி

விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா வெள்ளிப் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.

விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா வெள்ளிப் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.
கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்களுக்கு அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா பதக்கங்களை வழங்கி கெளரவித்தார். 
இதுதவிர, கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு முதலுதவிப்பெட்டி வழங்குவதற்காக கோல்டன்ஹவர் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதோடு, 400 பேருந்துகளுக்கு முதலுதவிப்பெட்டிகளை வழங்கினார்.  விழாவில் கழகத்தின் துணைத் தலைவர் ரவி, இயக்குநர் கே.சீனிவாஸ், எஸ்.ஆர்.உமாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
விழாவில் அமைச்சர் ரேவண்ணா பேசியது: விபத்தில்லாமல் பேருந்துகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள், புகார் எதுவுமில்லாமல் வேலைசெய்யும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களைப் பாராட்டி கெளரவிப்பதற்காக வெள்ளிப்பதக்கம் வழங்கும் திட்டம் 1982-இல் தொடங்கப்பட்டது. 
ஐந்தாண்டுகள் விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த பதக்கத்துடன் ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஆண்டு ஊக்கத்தொகை ரூ.50 அளிக்கப்படுகிறது. 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 86 ஓட்டுநர்களுக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
விபத்து நேரும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்து, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்காக தனி பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 
விபத்து நிகழும் இடத்துக்கு உடனடியாக இப் பேருந்துகள் அனுப்பிவைக்கப்படும். இந்த பேருந்து ஹெப்பாள் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும். 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால், 1062 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைத்து தனிபேருந்து வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். 
அவசரகாலத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வது குறித்து பயிற்சி அளிப்பதற்காக கோல்டன்ஹவர் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பெங்களூரு, ஹாசன், சிக்மகளூரு, மலவள்ளி பகுதியில் 11,009 ஓட்டுநர்கள், 3,583 நடத்துநர்கள், 13,704 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், 5,193 பழுது நீக்குவோர், 3,292 அலுவலக ஊழியர்கள் என 36,781 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் அளிக்கப்பட்டு, "உயிரைக் காப்பாற்றுவோன்' என்ற வாசகம் பொறித்த அடையாளச் சின்னம் வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com