பொங்கல் திருநாள்: கர்நாடக தமிழ்ச் சங்கங்கள் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன்: கர்நாடகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழர்களின் குரல் சட்டப் பேரவையில் ஒலிக்க வேண்டும் என கர்நாடக வாழ் தமிழர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டும் என்று பொங்கல் திருநாளில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் வேண்டுகிறது.
கர்நாடக தமிழர்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம். தமிர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
குனிய, குனியத்தான் அரசியல்வாதிகள் தமிழர்களின் முதுகில் சவாரி செய்வார்கள். தமிழர்கள் நிமிர்ந்து உரிமைக்கு குரல் கொடுத்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கென இதுவரை தமிழ்த் தேசிய தன்னாட்சி உரிமை பெற்ற நாடு உலக வரைபடத்தில் இடம் பெறவில்லை.
இந்தியாவில் உள்ளடங்கிய தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாநிலங்களில் மாநில அரசால் ஆட்சி மொழித் தன்மையை தமிழ் பெற்றுள்தோடு, இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இதுதவிர, இந்தியாவின் பிற நகரங்களான பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புதுதில்லி போன்ற நகரங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். மேலும் இலங்கை, சிங்கப்பூர், மொரீசியஸ் ஆகிய நாடுகளில் தமிழ் இனத்தின் அடையாளங்களாக அங்கு தேசிய மொழியாகவும் நாணயத் தாள்களில் தமிழ் வரிகள் அச்சிடப்பட்டும் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இரு நகராட்சிகளில் தகவல்கள் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் அளவுக்கு அங்கு கணிசமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலகில் உள்ள 264 நாடுகளில் 149 நாடுகளில் தமிழ் இனம் பரவியுள்ளது. இதை எல்லாம் மனதில் கொண்டு கர்நாடக வாழ் தமிழர்கள் இந்த முறை கர்நாடகத் தமிழனின் குரல் கர்நாடகச் சட்டப்பேரவையில் ஒலிக்க நாம் அனைவரும் ஒற்றுமையோடு சாதி மதம் கடந்து, அனைத்து தமிழர்களும் ஒன்றிணைவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் தவமணி: காலவெள்ளத்தில் தாய்த் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் நமது தாய்க்கொடி உறவாம் மொழி, கலை, பண்பாட்டை பேணி பாதுகாப்பதில் தமிழர்களை யாரும் விஞ்சமுடியாது. ஐக்கிய அமெரிக்க ஒன்றியத்தின் அங்கமாக விளங்கும் வர்ஜீனியா மாகாண அரசின் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாம் பொங்கல் நாளை பொது விடுமுறையாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
வர்ஜீனியா மாகாணத்தின் வரலாற்று சிறப்புவாய்ந்த இந்தத் தீர்மானத்தை மனதாரப் பாராட்டுவதோடு, அந்த மாகாணத்தின் முடிவு தமிழர்களின் பண்பாட்டு தொன்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும். இந்த செய்தியை இஸ்ரோ 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சாதனைக்கு நிகராக கருதுவோம்.
வர்ஜீனியாவில் தமிழர்கள் எப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், இந்த விளைவு நிகழ்ந்திருக்கும்? என்பதை நினைத்து பூரிப்படைவோம். நாம் செல்லும் இடமெல்லாம்,"இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்கிற புகழே வரவேண்டும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கர்நாடகத்தமிழர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
தமிழ்ச்சங்க கூட்டமைப்புத்தலைவர்
கு.புகழேந்தி: பொங்கல் என்னும் அறுவடைத் திருநாள் கர்நாடகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும் அளிக்கும் நன்னாள் ஆகும். உழவன் உள்ளம் குளிரவும் கர்நாடகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் உழவர் திருநாளை பெருமையாகக் கொண்டாடுவோம். இயற்கை அளிக்கும் கொடைக்கு நன்றி தெரிவிக்கும் நல்ல நாளான இன்று கர்நாடகத் தமிழர்கள் வாழ்வில் அறமும், பண்பும் சிறக்க, குன்றா வளமும்
நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ இந்த இனிய பொங்கல் நாளில் கர்நாடகத் தமிழர்களையும், அவர்களின் உறவுகளையும் கன்னட நண்பர்களையும் வாழ்த்தி அன்பும், அறிவும், அமைதியும், ஆனந்தமும் பொங்கிட இந்த தைப் பொங்கல் நன்னாளில் உளமார வாழ்த்துகிறேன்.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தலைவர் சி.இராசன்: தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தமிழ் பொங்கவும், மகிழ்ச்சி பொங்கவும், கண்ணீர் இல்லாமல் கவலை இல்லாமல், நோய் நொடியில்லாமல் நீண்டகாலம்வாழ்ந்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு செய்து மேன்மையுற செய்ய வேண்டும்.
உலகத் தமிழ்க் கழகத்தின் தண்டுக் கிளை தலைவர் கி.சி.தென்னவன்: உலக மாந்தன் முதலில்பேசிய தமிழ் மொழியை காலங்கள் கடந்தும் கடத்தி வந்திருக்கிறோம். பண்பாட்டு, அறுவடை திருவிழாவாம் பொங்கல் திருநாளை தமிழர்கள் உற்சாகத்தோடு கொண்டாடிவருகிறோம். உலக அளவில் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆங்காங்கே வாழும் தமிழர்களுக்கு சிலபல சிக்கல்கள் எழும்போதெல்லாம் ஒற்றுமையோடு அணுகி வெற்றி கொள்வோம். இந்த நாள் தமிழர்கள்வாழ்வில் மகிழ்ச்சிபொங்கி, வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் மு.மீனாட்சி சுந்தரம்: உழைத்துவர உழைப்பின் பயனைத் துய்க்கும் திருவிழா பொங்கல் நன்னாளாகும். தமிழர் பண்பாட்டை உணர்த்தும் நல்லதோர் விழா. உலகெங்கும் அறுவடை நாள் என்பது விழாவாகப் பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டு வந்தாலும் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து கொண்டாடும் விழாவாகவும் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆக்களுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடுவதே தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.
'உழுவார் உலகத்தார்க் காணி' என உழவுத் தொழிலைப் போற்றிய அய்யன் வள்ளுவப் பெருந்தகைக்கும் சேர்த்து விழா எடுக்கும் இந்த நன்னாளில் உலகத் தமிழர் அனைவருக்கும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை வளம் பல பெற்று வாழ வாழ்த்துகின்றது.ஈழத் தமிழர் சிறந்ததொரு விடியலைக் காணவும் பேரவை வாழ்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com