பேரவைத் தேர்தல் 2018

அறிந்துகொள்வோம் தலைவர்களை...
ஜி.பரமேஸ்வர்
கர்நாடக அரசியலில் மாறுபட்ட,  மென்மையான,  உறுதியான அணுகுமுறை கொண்ட அரசியல் தலைவர் ஜி.பரமேஸ்வர். மாற்றுக் கட்சியினராலும் நட்பு பாராட்டக் கூடியவர்.  
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 8 ஆண்டுகளாக நீடித்துவருவதே சாதனை.   2010 அக்டோபர் 27-ஆம் தேதி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஜி.பரமேஸ்வர், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தார். 
1951 ஆகஸ்ட் 6-இல் பிறந்த ஜி.பரமேஸ்வர், தனது தந்தை கங்காதரையா தொடங்கிய ஸ்ரீசித்தார்த்தா தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.  பின்னர், ஸ்ரீசித்தார்த்தா மருத்துவக் கல்லூரியையும் தொடங்கினார். இந்தக் கல்லூரியைத் தொடக்கிவைப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கே,  அப்போதைய கல்வித் துறை அமைச்சர் எஸ்.எம்.யஹ்யா ஆகியோருடன் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை அழைக்க தில்லிக்குச் சென்றிருந்தார். பரமேஸ்வரின் அறிவாற்றலைக் கண்ட ராஜீவ் காந்தி, காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றுமாறு கேட்டுகொண்டார். அதைதொடர்ந்து, அரசியலில் நுழைந்த பரமேஸ்வர்,  1989-ஆம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டார். 
1989-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்று,  முதல்முறையாக சட்டப்பேரவைக்குச் சென்றார். 1993-இல் வீரப்ப மொய்லி தலைமையிலான காங்கிரஸ் அரசில் பட்டு வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 
1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுகிரி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஜத வேட்பாளர் கங்கஹனுமையாவைக் காட்டிலும் 55,802 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சாதனை படைத்தார்.  அந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது ஜி.பரமேஸ்வர் மட்டுமே. 
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் அமைந்த அரசில் ஜி.பரமேஸ்வர், உயர்கல்வித் துறை, அறிவியல்,  தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவிவகித்தார். 2001-இல் மருத்துவக் கல்வித் துறை பொறுப்பும், 2003-இல் செய்தி, விளம்பரத்துறை பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. 
2004-இல் மதுகிரி தொகுதியிலும், 2008-இல் கொரட்டகெரே தொகுதியிலும் வென்றார்.  ஆனால் 2013-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெற செய்த ஜி.பரமேஸ்வர், தனது சொந்த தொகுதியான கொரட்டகெரேயில் தோல்வியை தழுவினார். 
இதை தொடர்ந்து, 2014-இல் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக பதவியேற்று திறம்படப்  பணியாற்றினார்.
 ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் தனது உள் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். 
அது முதல் கட்சியைத் தேர்தலுக்கு தயார்ப்படுத்தும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார். முதல்வர் சித்தராமையாவுடன் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர இருவரும் இணைந்து செயலாற்றி வருகிறார்கள். 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஜி.பரமேஸ்வர், அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்திட்டமாகும். 
காங்கிரஸ் மேலிடம் அளித்துள்ள செயல்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உழைத்துவரும் ஜி.பரமேஸ்வர், தனது தலைமையில் இரண்டாவது முறையாக கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரும் நம்பிக்கையில் உள்ளார்.


"தனது 5 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்துள்ள சித்தராமையா, சமுதாயத்தைப் 
பிளவுப்படுத்த சதி செய்துள்ளார்.  பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா, லிங்காயத்து சமுதாயத்தைத் சேர்ந்தவர் என்பதால், அந்த சமூகத்தை பிளவுப்படுத்த சித்தராமையா முயற்சிக்கிறார். '
-பி.முரளிதர்ராவ், கர்நாடக பாஜக பொறுப்பாளர்.


"பாஜக ஆட்சிக்கு வந்தால், மல்லிகார்ஜுன கார்கே,  அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ள சொத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்.  புத்தவிகார் 
திட்டத்துக்காக மல்லிகார்ஜுன கார்கே நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ.900 கோடி கிடைத்தது. ஆனால் அதில் ரூ.35 கோடியை மட்டுமே கார்கேவின் அறக்கட்டளை 
செலவிட்டுள்ளது.'
-மாலிகையா குத்தேதார், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

"கர்நாடகத் தேர்தலில் 
போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதாக அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லீமீன் கட்சித் தலைவர் அசாதின் ஓவைசி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். மதவாதச் சக்திகளை வீழ்த்துவதற்கு அவர் சரியான முடிவை எடுத்துள்ளார்.'
-கே.ரகுமான்கான்,  காங்கிரஸ்  மத்திய முன்னாள் அமைச்சர்.


"காங்கிரஸ் தலைவர்களிடையே சீரான புரிந்துணர்வு இல்லாததன் விளைவாக, முக்கியமான காலக்கட்டத்தில் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் கட்சி பலவீனமடைந்துவருகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல.'
-வி.ஆர்.சுதர்ஷன், கர்நாடக காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர்.

"கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் அரசு செய்துள்ள பணியை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.  இந்தப் பணியை அங்கீகரிக்கும் வகையில், சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸுக்கு 
வாக்களிப்பார்கள்.'
-யூ.டி.காதர்,  உணவு,  பொது வழங்கல்துறை அமைச்சர்.

தேர்தல் துளிகள்...
* சட்ட  விரோத சுரங்கத் தொழில் வழக்கில் பிணையில் வெளியே உள்ள பாஜக முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி
மொலகல்மூரு தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தனது நண்பர் பி.ஸ்ரீராமுலுவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சித்ரதுர்காவில் முகாமிட்டுள்ளார்.  ஜனார்தன ரெட்டிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும்,  அவர் மறைமுகமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
* காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வெளியிடுவதாகக் கூறப்பட்ட நிலையில்,  இரவு 8 மணிக்குதான் வேட்பாளர் பட்டியல் தில்லியில் இருந்து வெளியானது.  வாய்ப்பு கிடைக்காதவர்களைத் தொடர்புகொண்டு சமரசம் செய்யும் வரையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்று முதல்வர் சித்தாரமையாவும்,  கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.பரமேஸ்வரும் கேட்டுக்கொண்டதாலேயே பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*  தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்துள்ளது.  இதையடுத்து, 20 தொகுதிகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.  இந்தத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு மஜதவினர் வற்புறுத்தி வருவதால்,  கூட்டணியில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
 * உத்தரப் பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக விமர்சித்ததால்,   அவரது தலைமையில் செயல்படும் நாத் பந்த் பீடத்தை நம்பியிருக்கும் ஒக்கலிகர்களை  காங்கிரஸ் மாநில செயல்தலைவர் தினேஷ் குண்டுராவ் அவமதித்துவிட்டதாக கர்நாடக ஒக்கலிகர் கூட்டமைப்பு கூறியுள்ளது.  இதுதேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், தேர்தலில் போட்டியிட தினேஷ் குண்டுராவுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்தை கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
*தேர்தல் பிரசாரத்துக்கு   யோகி ஆதித்யநாத் வரும்போது,  அவரை மக்கள் தாக்க வேண்டும் என்பது உள்பட தரக்குறைவாக பேசியதாக காங்கிரஸ் மாநில செயல்தலைவர் தினேஷ்குண்டுராவ் மீது தேர்தல் ஆணையத்துக்கு பாஜக புகார் அளித்துள்ளது. இதோடு, பொதுக்கூட்டங்களில் பேச தினேஷ்குண்டுராவுக்கு தடைவிதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
*என்.ஒய்.கோபாலகிருஷ்ணா (பெல்லாரி ஊரகம் தொகுதி),  சிம்மனகட்டி (பாதாமி),  மக்புல் எஸ்.பகவான் (விஜயபுரா),  கே.சிவமூர்த்தி (மாயகொண்டா),  மனோகர் டி.தாசில்தார் (ஹனகல்), ஜி.ராமகிருஷ்ணா (கலபுர்கி ஊரகம்), பசவராஜ் என்.சிவன்னவர்(பியாட்கி), எச்.பி.ராஜேஷ்(ஜகளூர்), பி.எம்.நாகராஜ்(சிரிகுப்பா), ஜி.எச்.சீனிவாஸ்(தரிகெரே), கே.சடக்ஷரி(திப்தூர்), எஸ்.ஜெயண்ணா(கொள்ளெகால்) ஆகிய 12 எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
* முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி  சித்தையா,  கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் மஞ்சே கெளடா ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது காங்கிரஸாரிடையே   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 * முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா (வருணா தொகுதி),  அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவின் மகன் சந்தோஷ்ஜெயசந்திரா (சிக்கநாயகனஹள்ளி),  அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் செளம்யா (ஜெயநகர்)  ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் இடமளித்துள்ளது.  மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் மகள் ரூபா சசிதர் (கோலார் தங்கவயல்),  அண்மையில் மறைந்த எம்எல்ஏ ருத்ரேஷ்கெளடாவின் மகள் கீர்த்தனா(பேளூர்)  ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 
* முன்னாள் அமைச்சர் ஷாமனூர் சிவசங்கரப்பா (தாவணகெரே தெற்கு),  அவரது மகனும் அமைச்சருமான எஸ்.மல்லிகார்ஜுன் (தாவணகெரே வடக்கு), அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா(விஜயநகர்), அவரது மகனும் எம்எல்ஏவுமான பிரியா கிருஷ்ணா(கோவிந்த்ராஜ்நகர்)ஆகிய தந்தை-மகனுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது.
* காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் வீரசைவ லிங்காயத்து சமுதாயத்துக்கு 45,  ஒக்கலிகருக்கு 42, தாழ்த்தப்பட்டோருக்கு 31, பிற்படுத்தப்பட்டோருக்கு 27, பழங்குடியினருக்கு 24, சிறுபான்மையினருக்கு 20(முஸ்லிம்களுக்கு 15), குருபருக்கு 17, பிராமணருக்கு 6, கொடவாவுக்கு 1, ஆர்ய வைஸ்யாவுக்கு 1, பண்ட் சமுதாயத்திற்கு 4 இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 
* காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மேயர் ஜி.பத்மாவதி (ராஜாஜி நகர்), லட்சுமி ஹெப்பாள்கர்(பெலகாவி ஊரகம்), அஞ்சலி நிம்பல்கர்(கானாபூர்), அமைச்சர் உமாஸ்ரீ(தேர்தாலா), ரூபா சசிதர்(கோலார் தங்கவயல்) உள்பட 15 பெண்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com