"எண்ணியதை எண்ணியவாறு செய்து முடித்தார் கருணாநிதி'

எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கோ.தாமோதரன் புகழாரம் சூட்டினார்.

எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கோ.தாமோதரன் புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர் பேசியது: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க 1991-ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்ச் சங்கத்துக்கு அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் முறையான முன் அனுமதி பெற்று திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 
இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அதையும் மீறி சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய கன்னட அமைப்புகள் திருவள்ளுவர் சிலை திறக்க தடையாணை பெற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து, சிலை திறப்புவிழா நிறுத்தப்பட்டு, பீடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை மூடப்பட்டது. உயர் நீதிமன்றம் விதித்த தடையாணையை நீக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் சட்டப்போராட்டம் நடத்தியது. 18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், திருவள்ளுவர் சிலை திறக்க வழிவகை தெரியாமல் திகைத்திருந்தோம். இது உலகத் தமிழர்களுக்கு பெரும் வேதனையாக இருந்து வந்தது. திருவள்ளுவர் சிலையைத் திறக்க மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோற்றன. 
இந்த சூழலில், தில்லி தமிழ்ச் சங்கத்தில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பங்கேற்ற அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, பெங்களூரில் மூடப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.
திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் வரை கர்நாடகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் என்று கூறியிருந்தார். அந்தசமயம் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்த அப்போதையகர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கருணாநிதியும் சந்திக்க நேர்ந்தது. அந்தசந்திப்பில் திருவள்ளுவர் சிலை திறக்க உதவும்படி எடியூரப்பாவை கருணாநிதி கேட்டுக்கொண்டார். 
இதைத் தொடர்ந்து, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையும், பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும் திறப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசும், கர்நாடக அரசும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 2009-ஆம் ஆண்டு ஆக.9-ஆம் தேதி பெங்களூரில் நடந்த விழாவில் திருவள்ளுவர் சிலையை கருணாநிதியும், ஆக.13-ஆம் தேதி சென்னையில் சர்வக்ஞர் சிலையை எடியூரப்பாவும் திறந்துவைத்தனர். 
கருணாநிதி எண்ணியப்படி, திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்துவிட்டார். இது கர்நாடகத்தமிழர்களின்சமூக வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்வாக அமைந்துவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com