பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்கவைத்து மகிழ்ந்தவர் கருணாநிதி!

பெங்களூரில் 18 ஆண்டுகாலம் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்கவைத்து மகிழ்ந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்கவைத்து மகிழ்ந்தவர் கருணாநிதி!

பெங்களூரில் 18 ஆண்டுகாலம் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்கவைத்து மகிழ்ந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி.
வான்புகழ் திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை வடிக்க வேண்டும் என்பது பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் கனவாக இருந்தது. இந்த கனவை நனவாக்க சங்க நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், 1991-ஆம் ஆண்டு அமைந்த புலவர் க.சுப்பிரமணியன் தலைமையிலான செயற்குழுவினர் பெங்களூரு மாநகராட்சியின் முன் அனுமதி பெற்று அல்சூர் ஏரி எதிரே திருவள்ளுவருக்கு பீடம் அமைத்து சிலையும் நிறுவினர். 
சிலையைத் திறக்க நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், கன்னட அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால், சிலை திறப்பு திடீரென நின்றுபோனது. இதை எதிர்த்து பெங்களூரு தமிழ்ச்சங்கம் தொடர்ந்த வழக்கு 18 ஆண்டுகளாக நிலுவையிலே இருந்து வந்தது. 
திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் வரை பெங்களூரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டேன் என்று அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்திருந்தார். 
இந்நிலையில், கர்நாடக அரசும், தமிழகம் அரசும் எடியூரப்பாவும் கருணாநிதியும் எடுத்துக் கொண்ட கடிதவாயிலான முயற்சியின் விளைவால், 18 ஆண்டுகாலமாக மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை திறக்கும் காலம் கனிந்தது. சிலை திறப்புக்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் க.சுப்ரமணியன், மீனாட்சிசுந்தரம், கோ.தாமோதரன், தினச்சுடர் ஆசிரியர் பா.சு.மணி, சண்முகவேலன் உள்ளிட ஏராளமானோர் முனைப்புடன் செயலாற்றியுள்ளனர். 
2009, ஆக.9-ஆம் தேதி பெங்களூரு, ஆர்.பி.என்.எம்.எஸ்.கல்லூரி வளாகத்தில் கர்நாடக அரசு சார்பில் அமைத்திருந்த பிரமாண்டமான மேடையில் அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில், அப்போதைய கர்நாடக எதிர்க் கட்சித் தலைவர் சித்தராமையா, எம்.எல்.ஏ.க்கள் ரோஷன்பெய்க் முன்னிலையில் நடந்த விழாவில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி சிலையைத் திறந்துவைத்தார். 18 ஆண்டுகளாக நான் ஏற்றிருந்த சவால் நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சிப் பொங்க தனது உரையில் குறிப்பிட்டார் கருணாநிதி. 
இந்தவிழாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அன்று முதல் இந்த திருவள்ளுவர் சிலைக்கு தனிச்சிறப்பு ஏற்பட்டது. பெங்களூருக்கு வரும் உலகத் தமிழர்கள், தமிழினப்பண்பாட்டு சின்னமாக விளங்கும் திருவள்ளுவர் சிலைக்கு கெளரவம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 
பெங்களூரின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறிவருகிறது. திருவள்ளுவர் சிலையை சுற்றி அழகியப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எண்ணச் சிதறல்களை பொங்கி பேசுவதற்காக இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் புகழ்பரப்பும் பணியில் பெங்களூரு தமிழ்ச்சங்கம் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளது. 
திருக்குறளை கன்னடம், ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து நூல்வடிவில் அனைத்து மொழி சகோதரர்களுக்கும் விநியோகித்து வருகிறது. திருவள்ளுவர் சிலை திறப்பின்மூலம் திருக்குறளின் மெய்ப்பொருளைக் கன்னடர்கள் மட்டுமல்ல இதர மொழியினரும் கற்று உணரும் நிலை உருவாகியுள்ளது. இந்த சிலையை திறக்க பெரும் முயற்சி எடுத்துக்கொண்டவர் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என்பதை கர்நாடகத்தமிழர்கள் இன்றைக்கும் நினைத்து பார்க்கிறார்கள். 
திருவள்ளுவர் சிலையைக் காணும்போதெல்லாம் கருணாநிதியின் நினைவு கர்நாடகத்தமிழர்களின் மனதில் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை. தமிழர்-கன்னடர் நல்லுறவு சின்னமாக விளங்கும் திருவள்ளுவர் சிலையின் வடிவில் கருணாநிதியை கன்னடர்களும் நினைத்து பார்க்க தவறவில்லை என்பது கர்நாடக வரலாற்றில் திருப்புமுனையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com