திபெத்தியர்களுக்கு அடைக்கலம் தந்து உதவியதற்காக: கர்நாடக மக்களுக்கு பெளத்த மத குரு தலாய் லாமா நன்றி

தஞ்சம் தேடி இந்தியாவுக்கு வந்த திபெத்திய மக்களுக்கு அடைக்கலம் தந்து உதவிய கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெளத்த மத குரு தலாய் லாமா தெரிவித்தார்.

தஞ்சம் தேடி இந்தியாவுக்கு வந்த திபெத்திய மக்களுக்கு அடைக்கலம் தந்து உதவிய கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெளத்த மத குரு தலாய் லாமா தெரிவித்தார்.
திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சீன அரசு,  இது திபெத்திய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1959-ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதால்,  திபெத் நாட்டின் தலைநகராக விளங்கிய லாசாவில் கலவரம் வெடித்தது.
இதைத் தொடர்ந்து,  திபெத்திய மக்களை நசுக்கிய சீன அரசு, கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது.  மத்திய திபெத்திய நிர்வாகத்தின் உதவியால் இந்தியாவில் தஞ்சமடைய விரும்பிய திபெத்திய பெளத்த மதக் குரு தலாய் லாமா,  அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் அடைக்கலம் கேட்டார்.  இதற்கு உடனடியாக ஒப்புக்கொண்ட நேரு, இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் திபெத்திய மக்களைக் குடியேற்ற அனுமதித்தனர். 
1959-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்ட திபெத்தியர்கள், மார்ச் 30-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.  மத்திய திபெத்திய நிர்வாகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி,  கர்நாடகத்தில் மைசூரு மாவட்டத்தின் பைலுகுப்பே,  குடகு மாவட்டத்தின் குஷால்நகர், வடகன்னட மாவட்டத்தின் முந்த்கோட்,  சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் உள்ளிட்ட ஐந்து இடங்களில் திபெத்தியர்கள் குடியேற்றப்பட்டனர். 
அதன் 60-ஆவது ஆண்டு விழாவை மத்திய திபெத்திய நிர்வாகம் இந்தியா முழுவதும் கொண்டாடிவருகிறது. " நன்றி இந்தியா' என்ற பெயரில் திபெத்தியர்கள் குடியேறிய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. 
அதன்படி,  பெங்களூரில் வெள்ளிக்கிழமை "நன்றி இந்தியா' விழா நடத்தப்பட்டது.  முதல்வர் குமாரசாமி தலைமையில் நடந்த இந்த விழாவில் திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமா பங்கேற்றுப் பேசியது:  
திபெத்தியர்கள் நன்றி உள்ளவர்கள் என்பதையும்,  தங்கள் மீது காட்டிய கருணையை மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டவே இவ் விழாக்கள் நடத்தப்படுகின்றன. 1950-களில் நான் சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்குச் சென்று, அங்கு சீனர்களுடன் நட்புறவை மேம்படுத்த முயன்றுள்ளேன்.  சீன காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றவும் நான் விருப்பம் தெரிவித்திருந்தேன்.  சீனர்கள் திபெத்திய மக்களை நசுக்க முயன்றனர்.  அதன் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தோம். 
எங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு தஞ்சமளித்தார்.  திபெத்திய கலாசாரத்தைப் பாதுகாக்க முழுமையாக உதவுவதாக தெரிவித்த நேரு,  மத்திய கல்வித் துறை மூலம் திபெத்தியர்களுக்கு தனிப் பள்ளிகளை அமைத்தார்.  நேருவின் கொள்கையால் இந்தியாவில் எங்களுக்கு தஞ்சம் கிடைத்தது.  இங்கே வந்தபோது நிலைகுலைந்திருந்தோம்.  குறிப்பாக, கர்நாடகத்தில் இடமளித்து திபெத்தியர்களுக்கு அடைக்கலம் அளித்த நன்மக்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.  கடந்த 60 ஆண்டுகளில் தன்னம்பிக்கை பெற்றுள்ளோம்.  நேரு மற்றும் இந்திய அரசின் உதவியை மறக்க மாட்டோம் என்றார்.
மத்திய திபெத்திய நிர்வாகத் தலைவர் லோப்சங் சங்கய் பேசுகையில், "திபெத்திய மக்களை ஒடுக்க சீன அரசு மேற்கொண்ட செயல்கள் வேதனை அளிக்கக் கூடியவை. திபெத்திலிருந்த 98 சதவீத துறவி மடங்களை சீனா அழித்துவிட்டது.  திபெத்தில் 152 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.  திபெத்தை சீனா சீரழித்துவிட்டது' என்றார்.
முன்னதாக, விழாவில் திபெத்தியர்கள் கர்நாடகத்தில் குடியேற தாமாகமுன்வந்து நிலம் வழங்கிய முன்னாள் முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பாவின் மகன் பேராசிரியர் எஸ்.என்.கிரண்சங்கர் தலாய் லாமாவால் கெளரவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com