காவிரி விவகாரம்: கர்நாடக எம்.பி.க்கள்  இன்று ஆலோசனை

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பு குறித்து விவாதிக்க பெங்களூரில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல்வர் சித்தராமையா

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பு குறித்து விவாதிக்க பெங்களூரில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்.16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கியிருந்ததோடு, தனது தீர்ப்பை அமல்படுத்த ஏதாவதொரு செயல்திட்டத்தை(காவிரி மேலாண்மை வாரியம் போன்றவை) கொண்டுவர மத்திய அரசுக்கு ஆணையிட்டிருந்தது. 
இந்த தீர்ப்பு குறித்து பெங்களூரில் மார்ச் 8-ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. 
கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கியதை வரவேற்றுள்ள கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்த நிலையில், புதுதில்லியில் உள்ள கர்நாடக இல்லத்தில் மார்ச் 16-ஆம் தேதி நடக்கவிருந்த 
கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 22) முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com