பேரவைத் தேர்தல்: கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து கர்நாடக மாவட்ட, வட்ட நிர்வாகிகளுடன் அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து கர்நாடக மாவட்ட, வட்ட நிர்வாகிகளுடன் அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கடலோர கர்நாடக மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 20) முதல் தனது மூன்றாம்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மங்களூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் புதன்கிழமை தென்கன்னடம், உடுப்பி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
"கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்காக கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு செயல்படுத்திய திட்டங்களை வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். 
இதுதவிர, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு துறைகளில் தோல்வி அடைந்துள்ளது குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். கர்நாடகத்தில் முந்தைய பாஜக அரசின் ஊழல் குறித்தும் விளக்க வேண்டும். கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும்' என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 21 சட்டப்பேரவைத் தொகுதிகளின் 26 வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டம் குறித்து அமைச்சர் பிரமோத் மத்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
தென்கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்ட, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவோருக்கு ஒருசில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தகுந்த கட்சிப் பதவி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் கட்சி முடிவு செய்யவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com