மாநிலங்களவைத் தேர்தல்: மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க நீதிமன்றம் அனுமதி

மாநிலங்களவைத் தேர்தலில் மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் வாக்களிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் வாக்களிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற மார்ச் 23-ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் நான்கு இடங்களுக்கு பதிலாக காங்கிரஸ் 3, பாஜக, மஜத தலா ஒரு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதனால் தேவையில்லாமல் போட்டி உருவாகியுள்ளது. 
காங்கிரஸ் தனது 3-ஆவது வேட்பாளரை வெற்றிபெற செய்ய கூடுதலாக 10 இடங்கள் தேவைப்படுகிறது. மஜத அதிருப்தி அடைந்துள்ள 7 எம்எல்ஏக்கள் வெகுவிரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார்கள். எனவே, 7 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 3-ஆவது வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்துகொள்ள அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வியூகத்தை முறியடித்து, மஜதவின் வேட்பாளர் பி.எம்.ஃபாரூக்கை வெற்றிபெற செய்ய மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெகெளடா சட்டரீதியான நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளார். 
இந்நிலையில், 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஜதவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்.செலுவராயசாமி, அகண்டசீனிவாஸ்மூர்த்தி, ஜமீர் அகமதுகான், எச்.சி.பாலகிருஷ்ணா, ரமேஷ் பண்டிசித்தேகெளடா, இக்பால் அன்சாரி, பீமா நாயக் ஆகிய 7 பேரும் வாக்களித்திருந்தனர். 
கட்சியின் கொறடா உத்தரவை மீறி கட்சிமாறி வாக்களித்த 7 எம்எல்ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட்டிடம் மஜத கடிதம் அளித்திருந்தது. இந்த புகார் தொடர்பாக மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரிடமும் விசாரணை நடத்திய பேரவைத்தலைவர் கே.பி.கோலிவாட், தனதுதீர்ப்பை நிறுத்திவைத்துள்ளார்.
மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரின் பதவியைப் பறிக்க வேண்டும், மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மஜத எம்எல்ஏ சி.என்.பாலகிருஷ்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரசெளஹான், கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட் எடுக்கவிருக்கும் முடிவு புதன்கிழமை எதிர்பார்த்திருந்தது. ஆனால், தனது முடிவை பேரவைத்தலைவர் அறிவிக்காத நிலையில், அடுத்த விசாரணையை மார்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிபதி ராகவேந்திர செளஹான், மாநிலங்களவைத் தேர்தலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்களிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com