ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்காவிட்டால் போராட்டம்: சித்தராமையா

காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைமையில் ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று சித்தராமையா தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைமையில் ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் உரிமைக் கோரியுள்ளோம். தேர்தலுக்கு பிறகு அமைந்த கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பலம் உள்ளது.
இந்த நிலையில், மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளிக்காவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். 104 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு பாஜகவால் எப்படி ஆட்சி அமைக்க முடியும். அதனால் மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் பாஜகவின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிய மாட்டார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். ஆனால், நல்லாட்சி நடத்தியபிறகும், தோல்வி அடைந்துவிட்டோமே என்ற வேதனை உள்ளது. சட்டப்படி பெரும்பான்மை பலம் இருக்கக்கூடிய கட்சி அல்லது கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முதல் வாய்ப்பை அளிக்க வேண்டும்.
அதன்படி, மஜத-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தால், தீவிர போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com