அமைதியாக நடந்து முடிந்தது திப்புசுல்தான் பிறந்த நாள் விழா

பாஜக, ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு இடையே, கர்நாடகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்

பாஜக, ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு இடையே, கர்நாடகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திப்புசுல்தான் பிறந்த நாள் விழா அமைதியாக நடந்து முடிந்தது. 
திப்புசுல்தானின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் நவ. 10-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடுவது என கர்நாடக அரசு 2015-ஆம் ஆண்டு முடிவுசெய்தது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் திப்புசுல்தான் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளன.
உயிரிழப்பு: கடந்த 2015-ஆம் ஆண்டு மடிக்கேரியில் நடைபெற்ற திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவை எதிர்த்து பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற ஹிந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்திய போது கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
உற்சாகக் கொண்டாட்டம்: பெங்களூரு, விதானசெளதாவில் சனிக்கிழமை நடைபெற்ற திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜெயமாலா, முன்னாள் அமைச்சர் ரோஷன்பெய்க் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் குமாரசாமி, உடல்நலனை காரணம் காட்டி கலந்துகொள்ளவில்லை. 
பாஜகவினர் போராட்டம்: திப்புசுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட எதிர்ப்புத் தெரிவித்து குடகு மாவட்டத்தின் விராஜ்பேட், சோம்வார்பேட், மடிக்கேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இததையடுத்து, குடகு, தென் கன்னட மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைதுசெய்தனர்.
அரசு நடத்திய திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவில் பெரும்பாலான பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொள்ளவில்லை. 
முழு அடைப்பு: திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவைக் கண்டித்து, பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் குடகு மாவட்டத்தில் அழைத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
பலத்த பாதுகாப்பு: எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்பட 60 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர, 212 கர்நாடக மாநிலஅதிரடிப்படை அணியினர், 30 கர்நாடக ஆயுதப்படை அணியினர், 25 மத்திய ஆயுதப்படை அணியினர் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். பெங்களூரில் மட்டும் 11 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் பங்காற்றினர்.
சில சம்பவங்களைத் தவிர, மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் திப்புசுல்தான் பிறந்த நாள் விழா நடைபெற்றதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com