பெங்களூருக்கு இன்று திரும்புகிறார் குமாரசாமி

உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹெக்கடதேவனகோட்டேயில் ஓய்வில் உள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியை மருத்துவர்கள்

உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹெக்கடதேவனகோட்டேயில் ஓய்வில் உள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனை வழங்கிவருகின்றனர். இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை பெங்களூருக்கு திரும்புகிறார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காகத் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்ததால்,  இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ள முதல்வர் குமாரசாமி சோர்வடைந்துள்ளார். இதோடு, உடல்நலக்குறைவும் ஏற்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சில நாள்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
 இதைத் தொடர்ந்து,  நவம்பர் 9-ஆம் தேதி முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து பெங்களூரில் ஓய்வெடுத்து வந்த முதல்வர் குமாரசாமி,  மைசூரு மாவட்டத்தின் ஹெக்கடதேவனகோட்டேயில் உள்ள தனியார் கேளிக்கை விடுதிக்கு தனது மனைவி அனிதா, மகன் நிகில் ஆகியோருடன் சனிக்கிழமை சென்றார். அங்கு ஓய்வெடுத்து வந்த குமாரசாமியை மருத்துவர்கள் சோதித்து, தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 
கேளிக்கை விடுதியிலேயே முகாமிட்டுள்ள 7 மருத்துவர்கள், குமாரசாமியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கேளிக்கை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 40 நிமிடங்கள் நிகிலுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட  குமாரசாமி, 2 மணி நேரம் செய்தித்தாள்களை வாசித்தார்.  ஆழமான வாசிப்புப் பழக்கம் கொண்ட குமாரசாமி,  நூல்களை வாசித்தப்படி நேரத்தைச் செலவழித்தார். 
மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு சாப்பிட்ட குமாரசாமி, திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் பெங்களூருக்குத் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். 
 அரசியல் நெருக்கடி,  அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து குமாரசாமி விடுபட்டிருப்பதாக குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
ஓய்வுநேரத்தில், குமாரசாமி தனது மகன் நிகிலுடன் நீண்ட நேரத்தை கழித்ததோடு, அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் விவாதித்துள்ளார். 
கபினி ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி வனப் பகுதியில் அமைந்துள்ளதால், அவற்றை சுற்றிப் பார்க்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகவும்,  பெங்களூருக்கு திங்கள்கிழமை புறப்படுவதற்கு முன்பாக பழங்குடியினர்களைச் சந்தித்து பேசும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com