இடைத் தேர்தல்: வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ், பாஜக, மஜத திணறல்!

கர்நாடகத்தில் 3 மக்களவை, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில்

கர்நாடகத்தில் 3 மக்களவை, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ.3-ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 5 தொகுதிகளில் சிவமொக்கா, பெல்லாரி மக்களவைத் தொகுதிகள், ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், மண்டியா மக்களவை, ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மஜதவும் போட்டியிட கூட்டணி கட்சிகளிடையே முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடவுள்ளது.
சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திராவும், பெல்லாரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் சகோதரி ஜே.சாந்தாவும், மண்டியா மக்களவைத் தொகுதியில் டாக்டர் சித்தராமையாவும், ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீகாந்த்குல் கர்னியும் பாஜக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 
ஆனால், ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. முன்னாள் எம்எல்ஏ சி.பி.யோகேஸ்வரின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் எம்எல்சி  சி.எம்.லிங்கப்பாவின் மகன் சந்திரசேகரை கட்சியில் சேர்த்துக் கொண்ட பாஜக, அவரை வேட்பாளராக அறிவிக்க தயங்கி வருகிறது. 
ராமநகரம் மாவட்ட பாஜக தலைவர் ருத்ரேஷின் பெயரையும் பரிசீலித்துவரும் பாஜக, சி.பி.யோகேஸ்வரை களமிறக்க விரும்புகிறது.ஆனால், தேர்தலில் போட்டியிட சி.பி.யோகேஸ்வர் தயக்கம் காட்டிவருகிறார். ராமநகரம் தொகுதிக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா தலைமையில் ராமநகரில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
ஆனால் சி.பி.யோகேஸ்வரும், சந்திரசேகரும் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, நீண்ட விவாதத்துக்குப் பிறகு சந்திரசேகர் அல்லது ருத்ரேஷ் இருவரில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க நிர்வாகிகள் பரிந்துரைத்துள்ளனர்.
 இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவிடம் கலந்தாலோசித்து, பாஜக மத்திய நாடாளுமன்றக் குழுவுக்கு பரிந்துரைக்க விருப்பதாக சதானந்த கெளடா தெரிவித்தார். இதனிடையே, மண்டியா மக்களவைத் தொகுதியில் சித்தராமையாவை வேட்பாளராக அறிவித்துள்ளதற்கு பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
கட்சிக்காகப் பாடுபட்டவர்களை வேட்பாளராக்காமல், புதிதாக கட்சிக்கு சேர்ந்தவரை வேட்பாளராக்கியது சரியல்ல என்று கட்சிக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். இதேபோல, ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னியை அறிவித்துள்ளதற்கு அத்தொகுதி பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளனர்.
பாஜக பால் உற்பத்தியாளர் பிரிவுத் தலைவர் பசவராஜ் சிந்தூரி தனது எதிர்ப்பை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவிடம் தெரிவித்திருக்கிறார். தன்னை வேட்பாளராக்காமல் ஸ்ரீகாந்த் குல்கர்னி பெயரை அறிவித்திருப்பது சரியல்ல என்று கூறிய பசவராஜ் சிந்தூரியை எடியூரப்பா சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனாலும், எடியூரப்பாவின் சமாதான வார்த்தைகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பசவராஜ் சிந்தூரி தெரிவித்தார்.
இதனிடையே, ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா, மஜத வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநகரம் தொகுதியை மஜதவுக்கு விட்டுதந்ததற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டியா மக்களவைத் தொகுதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மஜத திணறிவருகிறது. 
மண்டியாவை காங்கிரஸுக்கும் , சிவமொக்காவை மஜதவுக்கும் ஒதுக்குமாறு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். நடிகை ரம்யாவின் தாய் ரஞ்சிதா, மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ சித்து நியாம கெளடாவின் மகன் ஆனந்த் நியாமகெளடாவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. 
ஆனால், பெல்லாரி, சிவமொக்கா மக்களவைத் தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறிவருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்கு பெங்களூரு,காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, பெல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
பெல்லாரி, சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தறிந்தனர். பெல்லாரி தொகுதியில் யாரை வேட்பாளராக்குவது என்பது குறித்து அலசப்பட்டது. எம்எல்சியாக உள்ள வி.எஸ்.உக்ரப்பாவை வேட்பாளராக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சிவமொக்கா தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் 
கிம்மனேரத்னாகர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, இத்தொகுதியை மஜதவுக்கு விட்டுத்தருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக பெங்களூரில் சனிக்கிழமை முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவிடம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாக தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். மஜத வேட்பாளராக மது பங்காரப்பாவை நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மக்களவை இடைத் தேர்தல் நடக்கும் பெல்லாரி,சிவமொக்காவில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க இயலாமல் காங்கிரஸ் திணறுவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 தொகுதிகளிலும் அக்.9-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அக்.16-ஆம் தேதி கடைசிநாளாகும். அதற்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ், மஜத, பாஜக தீவிரம் காட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com