"பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நலனை பாதுகாப்பது அவசியம்'

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நலனை பாதுகாப்பது அவசியமாகும் என்று பெங்களூரு தமிழ்ச் சங்க நலம்நாடும் சான்றோர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு.ஜானகிராமன் தெரிவித்தார்.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நலனை பாதுகாப்பது அவசியமாகும் என்று பெங்களூரு தமிழ்ச் சங்க நலம்நாடும் சான்றோர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு.ஜானகிராமன் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு தமிழ்ச் சங்க நலம் நாடும் சான்றோர் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் அதன் தலைவர் மு.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் நிர்வாகிகள் தங்கம் ராமசந்திரா, கி.சு.இளங்கோவன், கி.சி.தென்னவன், பி.ஆர்.கஜபதி, முல்லைக்கோ, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத்தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் இராம.சுப்ரமணியன், துணைச் செயலாளர் இல.பழனி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், வழக்குரைஞர்கள் குணவேந்தன், அருண், பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மு.ஜானகிராமன் பேசியது: நல்லோர் எழுவர் தமிழ் இலக்கியம், தமிழர் நலனில் அக்கறை கொண்டு தொடங்கப்பட்ட பெங்களூரு தமிழ்ச் சங்கம், கடந்த 68 ஆண்டுகாலமாக மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தமிழ்ச் சங்கத்தில் தேர்தல்நடைபெறும்போதெல்லாம் சிற்சில சிக்கல்கள் உருவாவது மனதிற்கு வேதனை தருகிறது. தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளாக யார் பணியாற்றினாலும், கர்நாடகத் தமிழர்கள் நலனை முன்னிறுத்தியே பங்காற்றவேண்டும். தன்நலனை காட்டிலும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நலனை பாதுகாப்பது அவசியமாகும். 
ஜனநாயக கட்டமைப்பில் செயல்படும் தமிழ்ச் சங்கத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடு எழலாம், அதற்காக கட்டுக்கோப்பை இழந்துவிடக் கூடாது. கர்நாடகத் தமிழர்களுக்கு வாய்த்துள்ள ஒரேஒரு அடைக்கலக்கூடம் தமிழ்ச் சங்கமாகும். 
அதை கட்டிக்காப்பாற்றி, அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நம்மை போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு உள்ளது. 
ஜாதி, மதம், அரசியல்போன்ற வேறுபாடுகளை களைந்து, தமிழர்களாக ஒன்றாகி, தமிழர்களின் நலன்காக்க பாடுபடுவோம். பெங்களூரு தமிழ்ச்சங்கம், தமிழர்களின், தமிழர்களால், தமிழர்களுக்காக நடத்தப்படும் இலக்கிய, பண்பாட்டு அமைப்பு என்பதை மறவாமல்; தமிழ்ச்சங்கம் நமக்கு என்ன செய்தது என்பதை காட்டிலும் தமிழ்ச் சங்கத்துக்கு நாம் என்ன செய்தோம் என்ற கடமையுணர்வுடன் செயல்படுமாறு எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கி.சு.இளங்கோவன் பேசுகையில்,"இந்தியாவில் சிறந்த தமிழ்ச்சங்கமாக பல விருதுகளை வென்றுள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கம், அதை கட்டுக்கோப்பை, கொள்கைகளை கைவிடாமல் செயல்பட வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமை நீங்கேல் தாழ்வு என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கர்நாடகத் தமிழர்களின் நலன்காக்க இயங்கும் தமிழ்ச் சங்கத்தின் நலன்காக்க நாம் அனைவரும் தியாகம் செய்ய முன்வர வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்கள் ஒதுங்க பெங்களூரு தமிழ்ச் சங்கத்தைவிட்டால் வேறு இடம் ஏது? இனமானமா? தன்மானமா? என்றால் தமிழினமானம் தான் பெரிது என்ற நோக்கில் நமது செயல்பாடு அமைந்திருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் ஒற்றுமையை ஓங்கி வலியுறுத்தும் நிலையில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் மனப்பிளவுகள் கூடாது. பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை காக்க வேண்டிய கடமை தமிழர்கள் ஒவ்வொருக்கும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com