"சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறார் பிரதமர் மோடி'

சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி என மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி என மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை உள்ளிட்ட நடுத்தர மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி நடவடிக்கையால் வர்த்தகர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஆவதற்கு முன் பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு காரணமானவர்களை தூக்கில் ஏற்ற வேண்டும் என மோடி தெரிவித்தார். ஆனால், தற்போது அவர் பிரதமர் ஆன பிறகு பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து வாய்திறக்க மறுத்து வருகிறார்.
மக்களின் குறைகளுக்கு செவிமடுக்காத பிரதமர் நமக்கு தேவையா என்பதனை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையால் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. மீண்டும் ஒரு முறை  வாய்ப்பளித்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனைகள் என்று கூறுவதற்கு எதுவுமில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பளித்தால், மக்களின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகு பிரதமர் மோடி சர்வாதிகாரப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். மக்களிடம் அதிக பொய்களை கூறி வருகிறார். இதனால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com