விநாயகர் சிலைகளை கரைக்க பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு

விநாயகர் சிலைகளை கரைக்க உதவி செய்வதற்காக கட்டுப்பாட்டு அறையை பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

விநாயகர் சிலைகளை கரைக்க உதவி செய்வதற்காக கட்டுப்பாட்டு அறையை பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை (செப். 13) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தெருவோரங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்க பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆவணங்களை தாக்கல் செய்துஅதற்கான அனுமதியை பெறலாம் என்று பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலையை மூன்று நாள்கள் கழித்து கரைப்பது வாடிக்கை ஆகும். அதன்படி, விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக எடியூர், கைகொண்டனஹள்ளி, தொட்டகனேனஹள்ளி, கசவனஹள்ளி, தேவரபீசனஹள்ளி, முன்னேகோலலு, தொரெகெரே, சிங்கசந்திரா, ஹேரோஹள்ளி, மல்லத்தள்ளி, உள்ளால், தாசரஹள்ளி, சாங்கி, அல்சூர், கோகிலு, ஜக்கூர், ராச்சேனஹள்ளி, பலனஹள்ளி, எலஹங்கா, அத்தூர், அல்லசந்திரா, தொட்டபொம்மசந்திரா உள்பட 22 ஏரிகளில் பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
விநாயகர் சிலை கரைப்பில் ஈடுபடும்போது உதவுதல், நடமாடும் சிலை கரைப்பு வாகனங்கள் நிற்குமிடங்களை அறிய பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையை 080-22224748, 22221188, 22660000 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகலாம். விநாயகர் சிலை கரைப்புப் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் என்று பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உரிய பாதுகாப்பு: சிலை கரைப்பு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர காவல் துறை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பதற்றமான பகுதிகள் என்று கருத்தப்படும் டேனரி சாலை, சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, ஜே.ஜே.நகர், யாரப் நகர், ஜே.சி.நகர், சிக்கபெட்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்பட பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
நடமாடும் சிலை கரைப்பு வாகனங்கள்: விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் வாகனங்களை நிறுத்த பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாநகரில் 292 வாகனங்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதுதவிர, 63 இடங்களில் தற்காலிகமாக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சிறிய சுற்றுச்சூழல் தோழமை விநாயகர் சிலைகளை பயன்படுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜராஜேஸ்வரி நகரில் பிடிஏ ரங்கமந்திரா, நிமிஷாம்பா கோயில், ஜெயநகர் 4-ஆவது பிளாக் காவல் நிலையம், ஹனுமந்த் நகர் காவல் நிலையம், ஜீவன்பீமா நகர் காவல் நிலையம், அல்சூர் காவல் நிலையம், எலஹங்கா புதிய நகரம் சிவா கோயில், தொட்டபளாப்பூர் சாலை பூர்ணபிரக்ஞா உயர்நிலைப் பள்ளி, எலஹங்கா பழைய நகரப் பேருந்து நிலையம், சஹகார் நகர் விநாயக கோயில், தாசரஹள்ளியில் பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், நெலகடரனஹள்ளி சதுக்கம், மாரோஹள்ளி கிராமத்தில் பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், பி.எஸ்.எல். லேஅவுட் முதல் தடம், சுங்கதகட்டேயில் சிண்டிகேட் வங்கி அருகில், ஹெக்கனஹள்ளி குறுக்குச் சாலை, மகாதேவபுரா காவல் நிலையம், எச்ஏஎல் விமான நிலைய சாலை, மார்த்தஹள்ளி குந்தனஹள்ளியில் ஏஇசிஎஸ் லேஅவுட், பீன்யா 2-ஆவது ஸ்டேஜ் பேருந்து நிலையம் அருகில், லக்கெரே பூங்கா அருகில், கேஐஏடிபி குடியிருப்பு, பசவேஸ்வர நகரில் பவித்ரா பாரடைஸ் அருகில், விஜயநகர் பேருந்து நிலையம் அருகில், மாகடி சாலை சனிபகவான்கோயில், மஞ்சுநாத் நகர் முதல் குறுக்குத் தெரு, மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குச் சாலை, மல்லேஸ்வரம் பிரிகேட் அடுக்குமாடி, யஷ்வந்த்புரம் காவல் நிலையம் உள்ளிட்ட 292 இடங்களில் நடமாடும் சிலை கரைப்பு வாகனங்கள் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும்.
அதேபோல, ஏரிகளில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் விநாயகர்சிலைகளை கரைக்க வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com