மாரிகுப்பம்-குப்பம் இடையே இணைப்புப்பாதைத் திட்டம் நிறைவேற்றப்படுமா?

கோலார் தங்கவயலில் உள்ள மாரிகுப்பம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் குப்பம் இடையே புதிய இணைப்புப்பாதை

கோலார் தங்கவயலில் உள்ள மாரிகுப்பம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் குப்பம் இடையே புதிய இணைப்புப்பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை.
கோலார் தங்கவயலில் உள்ள மாரிகுப்பம் ரயில் நிலையத்தில் இருந்து பிச்சானாத்தம் ரயில் நிலையம் வரை இணைப்புப்பாதை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. பெங்களூரில் இருந்து பாங்கார்பேட்டை வழியாக செல்லும் இருப்புப்பாதை கோலார் தங்கவயலில் உள்ள மாரிகுப்பம் ரயில் நிலையத்துடன் முடிவடைகிறது. 
அங்கிருந்து  சுமார் 11 கி.மீ. தொலைவில் பெங்களூரு-சென்னை ரயில் மார்க்கத்தில் உள்ள பிச்சானாத்தம் ரயில் நிலையத்திற்கு இணைப்பு இருப்புப்பாதை அமைத்தால், ரயில் போக்குவரத்து காரணமாக கோலார் தங்கவயலின் பொருளாதார நிலை மேம்படும் என்பதால், இணைப்புப்பாதையை அமைக்குமாறு இப்பகுதி மக்கள்நீண்டகாலமாக கோரி
வந்தனர். 
இதனிடையே, மாரிகுப்பம்-பிச்சானாத்தம் இடையே இணைப்பு இருப்புப்பாதையை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், குன்றுகள் நிறைந்த பகுதி என்பதால், இங்கு ரயில் பாதை அமைக்க முடியாது என்று அறிவித்து விட்டது.
இந்நிலையில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய ரயில்வே இணை அமைச்சராகயிருந்த  கே.எச்.முனியப்பா பொறுப்பேற்ற பிறகு, தனது கோலார் தொகுதிக்குள்பட்ட மாரிகுப்பம் மற்றும் பிச்சானத்தம் இடையே இணைப்புப்பாதை அமைக்க திட்டமிட்டார். 
2011-ஆம் ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் பிச்சானத்தம் வழியாக மாரிகுப்பம்-குப்பம் இடையே இணைப்பு இருப்புப்பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து, இணைப்பு இருப்புப்பாதைக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான செயல்திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநில மாரிகுப்பத்தில் இருந்து ஆந்திர மாநில குப்பம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு இருப்புப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 
புதிய இணைப்புப்பாதை அமையவிருந்த பகுதியின் இடையே திராவிட பல்கலைக்கழகம், தொட்டகல்லஹள்ளி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களை அமைக்கும் திட்டமும் வகுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.277 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. 
ஆனால், இந்தத் திட்டத்துக்காக தனியார், வனத் துறை நிலங்கள் எதுவும் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை. இருப்புப்பாதை அமைக்கும் தடத்தில் ரயில்வே துறை அடையாள கற்களை நட்டு வைத்துள்ளது.
ஆனால், இதரப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. புதிய இணைப்புப்பாதை பணியை விரைவில் தொடங்கி நிறைவு செய்தால், கோலார் தங்கவயலின் பொருளாதாரம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 
எனவே, கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com