கர்நாடகத்தில் அரசியல் பின்னணியில் ஜாதி!

கர்நாடகத்தில் சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெறும் தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டிகளைவிட, ஜாதியே பிரதானமாக விளங்கிவருகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


கர்நாடகத்தில் சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெறும் தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டிகளைவிட, ஜாதியே பிரதானமாக விளங்கிவருகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
கர்நாடக மிகப் பெரிய ஆளுமைகளாக விளங்கிய கெங்கல் ஹனுமந்தையா, எஸ்.நிஜலிங்கப்பா, பி.டி.ஜட்டி, வீரேந்திர பாட்டீல், தேவராஜ் அர்ஸ் போன்ற தலைவர்கள் தாங்கள் சார்ந்திருந்த ஜாதியால் காங்கிரஸுக்கு பாலமாகவும், பலமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
1956-இல் மொழிவழி மாநிலங்கள் உருவானபோது, கர்நாடகம் பூகோள ரீதியாக ஒன்றுபட்டிருந்தாலும், ஜாதி ரீதியாக பிளவுபட்டே இருந்து வந்துள்ளது. கர்நாடகத்தின் பெரும்பான்மை ஜாதி என்றால் லிங்காயத்து சமூகம்தான். அதற்கடுத்து ஒக்கலிகர்கள், குருபர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருக்கின்றன.
சமூக, பொருளாதார ரீதியாக லிங்காயத்துகள் பலம் பொருந்தியிருப்பதால், ஆரம்ப காலம்தொட்டே அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். அவர்கள் வட கர்நாடகத்தில் பெரும்பான்மையாக வசித்து வருவதால், வட கர்நாடகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் வழக்கம் இருக்கிறது. அதன் காரணமாகவே, லிங்காயத்துகளின் ஆதரவைப் பெற அனைத்துக் கட்சிகளும் அந்தச் சமூகங்களின் மடாலயங்களை மொய்த்து வந்துள்ளன.
22 முதல்வர்களில் 9 பேர் லிங்காயத்துகள்: சுதந்திரத்துக்குப் பின்னர், காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இந்தக் கட்சிகளின் சார்பில் முதல்வர்களாக இருந்த 22 பேரில் கடிதாள் மஞ்சப்பா, எஸ்.நிஜலிங்கப்பா, பி.டி.ஜட்டி, எஸ்.ஆர்.கந்தி, வீரேந்திர பாட்டீல், எஸ்.ஆர்.பொம்மை, ஜே.எச்.பாட்டீல், பி.எஸ்.எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய 9 பேர் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
லிங்காயத்துகளுக்குப் போட்டியாக ஒக்கலிகர்கள்: இந்த சமூகத்தின் அரசியல் ஆதிக்கத்தை உடைக்க தென் கர்நாடகத்தில் பெரும்பான்மையாக இருந்துவரும் ஒக்கலிகர்கள், ஆரம்பத்தில் இருந்து தீவிரமாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த கெங்கல் ஹனுமந்தையா, எச்.டி.தேவெகெளடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எச்.டி.குமாரசாமி, சதானந்த கெளடா ஆகிய 5 பேர் முதல்வர்களாகப் பதவி வகித்து, கர்நாடக அரசியலில் ஆளுமை செலுத்தியுள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக தேர்தல் நடந்தபோது, அத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் அக் கட்சியின் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான கெங்கல் ஹனுமந்தையாவை முதல்வராக்கியது. ஆனால், ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக இருக்க விரும்பாத லிங்காயத்து சமூகத்தினர் ஊழல் குற்றச்சாட்டைக் கூறி பதவியில் இருந்து துரத்தியதாகக் கூறப்படுவதுண்டு. அதன்பிறகு, ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த எச்.டி.தேவெ கெளடா, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வரானார். இந்த இடைப்பட்ட காலத்தில் லிங்காயத்துகள் அரசியலை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
லிங்காயத்துகள் காங்கிரஸில் ஆளுமை செலுத்தினர். அதனால் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி வந்தது. 1972-இல் அர்ஸ் சமுதாயத்தைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் முதல்வரான பிறகு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் அதிகளவில் ஈடுபடத் தொடங்கினர். அதன்விளைவாக, எஸ்.பங்காரப்பா, எம்.வீரப்பமொய்லி, தரம்சிங், சித்தராமையா ஆகிய 4 பேர் முதல்வர்களாக வர முடிந்தது. இதனிடையே, ராமகிருஷ்ண ஹெக்டே, குண்டுராவ் ஆகிய பிராமணர்கள் இருவரும் முதல்வர்களாக முடிந்தது.
முதல்வர் பதவியை விட்டுத் தர மனமில்லாத லிங்காயத்துகள்: ஆட்சி அதிகாரத்தை வேறு சமூகத்துக்கு விட்டுத்தர லிங்காயத்துகள் விரும்பியதே இல்லை என்றே கூறலாம். அதேபோல, லிங்காயத்துகளின் ஆதரவில்லாமல் வேறு எந்த சமூகத்தினரும் ஆட்சி நடத்துவது இயலாத காரியம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இந்த ஜாதி மோதல்தான் இன்றைய கர்நாடக அரசியலையும் ஆட்டிப்படைத்து வருகிறது. 2006-இல் ஒக்கலிகரான குமாரசாமியும், லிங்காயத்து சமுதாயத்தவரான எடியூரப்பாவும் மஜத-பாஜக கூட்டணி ஆட்சிஅமைத்தனர். 20 மாதங்களுக்குப் பிறகு முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுக் கொடுக்காத குமாரசாமிக்கு எதிராக லிங்காயத்துகள் திரும்பியதால்தான் 2008-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான பாஜக வென்றது. ஊழல் குற்றச்சாட்டில் அவர் பதவி விலகியபோது, ஒக்கலிகரான சதானந்த கெளடாவை முதல்வராக்கினார். ஆனால், அவரை வீழ்த்த எடுக்கப்பட்ட அரசியல் பலனளித்ததால், லிங்காயத்தவரான ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக்கப்பட்டார். பாஜகவின் பதவி மோதலால் வெறுத்த மக்கள், 2013-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பிற்படுத்தப்பட்ட குருபர் சமுதாயத்தை சேர்ந்த சித்தராமையா முதல்வரானார். இதை சற்றும் விரும்பாத ஒக்கலிகர்களும் லிங்காயத்துகளும் 2018-இல் நடைபெற்ற தேர்தலில் அவரை பதவியில் இருந்து விரட்ட காங்கிரஸை தோற்கடித்தனர். ஆனால் எடியூரப்பாவை முன்னிறுத்திய பாஜக, 104 இடங்களில் வென்றது. ஆனால், சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், முதல்வர் பதவியை எடியூரப்பா 3 நாள்களில் துறந்தார். இதை இன்றைக்கும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் லிங்காயத்துகள், ஒக்கலிகரான குமாரசாமியை ஆட்சியில் இருந்து விரட்டிவிட்டு எடியூரப்பாவை முதல்வராக்கத் துடிக்கிறார்கள். இதில் காங்கிரஸ், மஜத, பாஜக என்பதைக் காட்டிலும் எந்த ஜாதி தலைவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்பதை வைத்துத்தான் அந்தந்த அரசியல் கட்சிகளின் வெற்றி தேர்தலில் நிர்ணயிக்கப்படுகிறது.
2018-இல் நடைபெற்ற தேர்தலில் சித்தராமையாவைத் தோற்கடிக்க முடிவுசெய்த லிங்காயத்துகள் எடியூரப்பாவுக்காக பாஜகவையும், ஒக்கலிகர்கள் குமாரசாமிக்காக மஜதவையும் ஆதரித்தனர். அதனால் தான் நல்லாட்சி நடத்தியபோதும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. இந்த உண்மையை சித்தராமையாவும் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மனம்திறந்து கூறினார்.
தற்போது குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகக் கூறப்படுவது குறித்து கருத்துத் தெரிவித்த மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா, கூட்டணி ஆட்சியை வீழ்த்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் முயற்சிக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
ஆக, கர்நாடகத்தில் தற்போது மட்டுமல்ல, கடந்த 70 ஆண்டுகளாக நடந்துவரும் பதவிச் சண்டை அரசியல் சண்டை அல்ல, அது ஜாதி ஆதிக்கச் சண்டை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com