பயணிகளை பாதிக்காத வகையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த முடிவு'

பயணிகளை பாதிக்காத வகையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா


பயணிகளை பாதிக்காத வகையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், சிவமொக்க மாவட்டத்தில் சனிக்கிழமை 5 வழித் தடங்களில் புதிய பேருந்து சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. அண்மைக்காலமாக சுமார் ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை இழப்பைச் சந்தித்து வருகிறது.
டீசல் விலை உயர்வால் இழப்பை ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணக் கட்டணத்தை உயர்த்துவது என்ற முடிவை எடுத்துள்ளோம். சாதாரண பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை பாதிக்காத வகையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளோம். பேருந்துக் கட்டண உயர்வால் அரசு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை உயர்த்தி, இழப்பைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன்.
மாநில அளவில் பேருந்து நிலையங்களில் அதிகளவில் கடைகளை திறப்பதன் மூலம் கழகத்துக்கு தேவையான வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 6 லட்சம் கி.மீ. வரை ஓடிய பழைய பேருந்துகளை மாற்றி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். இனி அதன் என்ஜின்களை மட்டும் எடுத்துக் கொண்டு, புதிதாக பேருந்துகளை கட்டுமானம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகளுக்கு தேவையான கட்டுமான வசதிகளை செய்து தருவது எனவும் முடிவு செய்துள்ளோம். பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com