பறக்கும் ரயில் என்ஜின் பழுது: ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி

சென்னை வேளச்சேரி -கடற்கரை இடையே சென்றுகொண்டிருந்த பறக்கும் ரயில் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னை வேளச்சேரி -கடற்கரை இடையே சென்றுகொண்டிருந்த பறக்கும் ரயில் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை வேளச்சேரியில் இருந்து திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த பறக்கும் ரயில் பெருங்குடி - தரமணி இடையே கம்ப்ரஷர் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. மொத்தம் 9 ரயில் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் என்ஜினில் இருந்த கம்ப்ரஷர் (ஏர் பிரஷர் பைப்) வெடித்ததால் ரயில் என்ஜின் இயங்கவில்லை. இதனால் அந்த ரயில் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து அதை சீர்செய்ய முனைந்தனர்.
இந்நிலையில், அலுவலகங்களுக்கு செல்வோர் காலதாமதம் ஆனதால் செய்வதறியாது திகைத்தனர். சிலர் அங்கிருந்து மாநகரப் பேருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சிகள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும், இந்த ரயில் வழித் தடத்தில் பிற ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு இது குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை. இதனால் அவர்களும் பாதிப்புக்குள்ளாயினர். 
சுமார் ஒரு மணி நேரம் கழித்து சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதேவேளையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெருங்குடியில் நின்ற ரயிலை டீசல் என்ஜின் மூலம் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்தப் பாதிப்பு காரணமாக வேளச்சேரி- கடற்கரை இடையேயான ரயில் சேவை சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. ஒருவழியாக காலை 10.30 மணியளவில் இப்பாதையில் ரயில் சேவை சகஜநிலைக்கு திரும்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com