வழிபாட்டு தலங்களுக்கு அருகேயுள்ள மதுக் கடைகள்: 6 மாதத்துக்குள் அகற்ற உத்தரவு

வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 900 அரசு மதுபானக் கடைகளை...

வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 900 அரசு மதுபானக் கடைகளை (டாஸ்மாக்) 6 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, "மாற்றம் இந்தியா' அமைப்பின் தலைவரான ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:
மாநகராட்சி பகுதிகளில் கோயில்கள், கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் 50 மீட்டருக்குள்ளும், நகராட்சிப் பகுதிகளில் 100 மீட்டருக்குள்ளும் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என விதிகள் உள்ளன.
ஆனால், அந்த விதிகளை மீறி தற்போது அதிகப்படியான மதுபானக் கடைகள், கோயில்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றஉக்கு அருகில் உள்ளன.
விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மற்றும் ஆடம்பர மதுபான விடுதிகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அத்துடன் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 500 மீóட்டர் தள்ளியும், மற்ற ஊரகப் பகுதிகளில் 1,000 மீட்டர் தாண்டியும் மதுபானக் கடைகள், பார்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மதுபானக் கடைகள் குறித்து கணக்கெடுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது.
இந்தக் கெடு முடிவடைந்த நிலையில், மனு மீதான விசாரணை அதே அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "தமிழகம் முழுவதும் உள்ள 6,776 மதுபானக் கடைகளில், கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகில் மட்டும் 900 மதுபானக்கடைகள் உள்ளதாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
துல்லியமாக தூரத்தை அளவிடுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதால் இப்பணியை முடிக்க இன்னும் 2 மாதம் அவகாசம் தேவை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த 900 மதுபானக் கடைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு கோரப்படும் 6 மாத கால அவகாசத்தில் இந்த 2 மாதங்கள் கழித்துக் கொள்ளப்படும். வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் மதுபானக் கடைகளை திறக்காமல் இருந்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. வழக்கு விசாரணை வரும் நவம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com