சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு முக்கியத்துவம்

சுட்டுரை, கட்-செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை வெளியிட வேண்டும் என பிரசார் பாரதி (புதுதில்லி) தலைவர் சூர்யபிரகாஷ் வலியுறுத்தினார்.
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டில் அமைப்பின் ஊடகப் பிரிவு தலைவர் கருணாவுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பிரசார் பாரதி தலைவர் சூர்யபிரகாஷ். உடன் (இடமிருந்து)
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டில் அமைப்பின் ஊடகப் பிரிவு தலைவர் கருணாவுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பிரசார் பாரதி தலைவர் சூர்யபிரகாஷ். உடன் (இடமிருந்து)

சுட்டுரை, கட்-செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை வெளியிட வேண்டும் என பிரசார் பாரதி (புதுதில்லி) தலைவர் சூர்யபிரகாஷ் வலியுறுத்தினார்.
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் "மகிழ்ச்சியான சமுதாயத்துக்கு பண்புகள் நிறைந்த ஊடகம்' என்ற தலைப்பில் ஊடகத்துறையினருக்கான தேசிய மாநாடு சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரசார் பாரதி தலைவர் சூர்யபிரகாஷ் பேசியது: போலியோ இல்லாத இந்தியா, பெண் குழந்தையைக் காப்பாற்றுதல், தூய்மை இந்தியா உள்பட மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களைப் பிரபலப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பிரசார் பாரதி மேற்கொண்டு வருகிறது.
கிராமப்புறங்களில் முழுமையாக கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் தொடர்பு கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது.
கட்-செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை போன்றவற்றில் வரும் வதந்திகளை பகிர்வதையும், உறுதிப் படுத்தப்படாத செய்திகள் குறித்து கருத்து சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் வெளியிடப்படும் செய்திகள் பகிரப்படுவதால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பண்புகளையும், அறநெறிகளையும் அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களிடையேயும் பரவச் செய்வதற்கு பிரம்மாகுமாரிகள் அமைப்பு எடுத்து வரும் முயற்சி பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர் எம்.ராஜாராம்: பிரம்மா குமாரிகள் அமைப்புக்கு அமைதிக்கான விருதை அளித்து ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டில் பிரம்மா குமாரிகள் அமைப்பு மவுண்ட் அபுவில் ஏற்பாடு செய்திருந்த "தோல்வியிலிருந்து வெற்றி காண்பது' என்ற நிகழ்ச்சியில் நானும் (எம்.ராஜாராம்), முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் கலந்துகொண்டோம். இந்த நிகழ்ச்சி மூலம் தோல்வி குறித்த பயம் ஒன்றே பலரின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதும், முயற்சியின்றி தோல்வியைத் தழுவுவதும் தெரியவந்தது. எனவே வெற்றியின் அடிக்கல்லாக அமைவது தோல்விதான் என்றார் அவர்.
பிரம்மா குமாரி அமைப்பின் ஊடகப் பிரிவின் தலைவர் கருணா: இந்த அமைப்பானது 147 நாடுகளில் இருக்கும் தனது கிளைகள் மூலம் "ஒரு உலகம் ஒரு இறைவன்' என்ற அடிப்படைத் தத்துவத்தை மக்களுக்குப் புரியவைக்கிறது.
பிரம்மா குமாரிகள் அமைப்பின் பீஸ் ஆஃப் மைண்ட் என்ற தொலைக்காட்சி சேனல் ஆன்மிகத்தின் மூலம் அமைதியை உலகம் முழுவதும் 24 மணி நேரமும் பரப்பிக் கொண்டிருக்கிறது.
திரைப்பட இயக்குநர் வி.சி.குகநாதன்: இந்த அமைப்புக்கு தியானத்தைக் கற்றுக் கொள்ள ஒரு மாணவனாக வந்திருக்கிறேன். அமைதியான வாழ்வை மேற்கொள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கிறது.
இதேபோன்றுதான் வாழ்வியல் நெறிகளையும், ஒழுக்கத்தையும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் எனக்கு போதித்தார். அதைக் கடைப்பிடித்து வாழ்வதால்தான் அவரைப் போன்று பிறருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். திரைப்படம் என்ற ஊடகம் மூலம் தமிழக அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டன. நல்ல ஊடகத்தால்தான் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தினமலர் இணை ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, டெக்கான் கிரானிக்கல் நிர்வாக ஆசிரியர் பகவான்சிங், பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூத்த ராஜயோகினி கலாவதி, தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஷாந்த், தமிழ்நாடு சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா, திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தியானத்தை கடைப்பிடித்தால் ஊடக அறம் காப்பாற்றப்படும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

யானத்தைக் கடைப்பிடித்து மனதில் அமைதி ஏற்பட்டால் ஊடக அறம் காப்பாற்றப்படும் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது:
நாகஸ்வரம் இடம்பெற வேண்டும்: அகில இந்திய வானொலி நிலையத்தில், நிலைய வித்வான்கள் என்ற பதவிகளில் வயலின், புல்லாங்குழல், நாகஸ்வரம், மிருதங்கம், தவில் உள்ளிட்ட வாத்தியங்களை வாசிப்பவர்கள் போன்ற இசைக்கலைஞர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஆனால், தவிலும் நாகஸ்வரமும் இப்போது அந்தப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
எனவே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய தென்னக
மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்திய வானொலி நிலையங்களில் நாகஸ்வர வித்வான்களும் நிலைய வித்வான்களாக நியமிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை பிரசார் பாரதி தலைவர் முனைவர் ஆர். சூரியபிகாஷிடம் முன்வைக்கிறேன்.
பரபரப்பு வேண்டாம்: 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் காட்சி ஊடகங்கள் வந்த பிறகு பரபரப்பை தவிர்த்துவிட முடியுமா என்று நினைக்கத் தோன்றும். எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தாமல் மக்களுக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கும் ஒரு ஊடகமாக
83-ஆவது ஆண்டில் தினமணி அடியெடுத்து வைத்திருக்கிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு 18 இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேநாளில் தமிழகத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை தினமணி மட்டும்தான் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. பிறநாளிதழ்களில் கைதி தற்கொலை செய்திதான் தலைப்புச் செய்தியாக வெளியானது. "ஊடக அறம்' எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம், அவ்வளவே.
என்ன தீர்வு? விற்பனை, வியாபாரத்துக்காக மட்டுமே பத்திரிகை, ஊடகங்கள் பரபரப்பை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இவற்றை ஆதரிப்பது மக்கள்தான். அவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொண்டால் பத்திரிகைகள் தானாகவே தங்களின் எழுத்தை மாற்றிக் கொள்ளும்.
சமூக வலைதளங்களில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்ததையெல்லாம் பதிவேற்றம் செய்வதால் சமுதாயம் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஊடகவியலாளர்களின் மனதில் அமைதி ஏற்பட வேண்டும். அவர்கள் தெளிந்த நல்லறிவு பெற்றால்தான் ஒரு சுயகட்டுப்பாடு உருவாகும். அன்பையும், அமைதியையும் போதிக்கும் பிரம்மா குமாரிகளின் தியான முறை அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டால் மன அமைதி ஏற்படும் இது ஊடகவியலாளர்களுக்கு இன்றைய சூழலில் இன்றியமையாத தேவை'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com