மின்னணு குடும்ப அட்டை விநியோகத்தில் தாமதம்!

புகைப்படங்கள் மற்றும் முகவரிகளைச் சரி பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் சென்னையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் முகவரிகளைச் சரி பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் சென்னையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு எட்டு இலக்கங்கள் கொண்ட ரகசியக் குறியீடு வந்தால், அதனை நியாய விலைக் கடைகளில் காண்பித்து மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை நகரைப் பொருத்தவரையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மின்னணு குடும்ப அட்டைகள் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள புகைப்படங்கள், பெயர்கள், முகவரிகள் உள்ளிட்டவற்றைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னை மாவட்டம் முழுவதும் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிழைகள் அனைத்தும் முழுமையாகச் சரி செய்யப்பட்ட பிறகு மே மாத இறுதியில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி தொடங்கும் என்று தெரிவித்தனர்.
பொருள் இருந்தும் பயனில்லை: மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படாவிட்டாலும், இப்போதுள்ள பழைய அட்டைகளைப் பயன்படுத்தி பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அறிவித்திருந்தது.
சரிபார்ப்புப் பணிகளுக்காக சென்னையில் ஆன்-லைன் முறை அனைத்தையும் உணவுத் துறை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல், நியாய விலைக் கடைகளில் உள்ள இயந்திரங்களில் தெரியவில்லை. இதனால், பொருள்கள் இருந்தும் அவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நியாய விலைக் கடைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனால், குடும்ப அட்டைதாரர்கள் தினமும் நியாய விலைக் கடைகளுக்கு வந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, மின்னணு குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஆன்-லைன் முறையை நிறுத்தி வைக்காமல், பொருள்கள் வழங்குவதில் எந்தத் தடையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டுமென நியாய விலைக் கடைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com