சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.10 கோடி கோகைன் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தில்லிக்கு புறப்பட இருந்த ரயிலில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தில்லிக்கு புறப்பட இருந்த ரயிலில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பிரிவு போலீஸார், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தில்லிக்கு புறப்பட தயாராக இருந்த அந்த விரைவு ரயிலில் சந்தேகப்படும்படியாக இருந்தவர்களை விசாரித்து, அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஏ.சி. பெட்டியில் இருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்தபோது அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.
இதையடுத்து போலீஸார் அவரது உடமைகளை சோதனையிட்டனர். இச்சோதனையில் அந்த இளைஞர் வைத்திருந்த பையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 3.1 கிலோகிராம் கோகைன் இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார், அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்து, அதுகுறித்து அந்த இளைஞரிடம் மேலும் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த இளைஞர், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (27) என்பதும், அவர் சென்னையில் இருந்து தில்லிக்கு அதை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
மேலும், தென்அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த கோகைன் சென்னைக்கு விமானம் மூலம் கடத்தப்பட்டிருப்பதும், இங்கிருந்து தில்லிக்கு விஷால் மூலம் சர்வதேச கும்பல் கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. விஷால் நேரடியாக சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய சென்னை நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com