ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஆக்கிரமிப்பு உள்ளதா?

சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்ற

சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்ற இணைப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் அருகேயுள்ள என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பலர் கடை வைத்துள்ளதாகவும், இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில், போக்குவரத்து காவல் துறையினர் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் டிராபிக் ராமசாமி தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தும்படி மீண்டும் உத்தரவிட்டது. அதன் பின்னரும் போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவில்லை.
இதையடுத்து பூக்கடை போக்குவரத்து பிரிவு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்; திறமையான அதிகாரிகளை நியமித்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, நடைபாதை வியாபாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், ராஜா அண்ணாமலை மன்றம் அருகேயும், என்.எஸ்.சி. போஸ் சாலையிலும் வியாபாரிகள் பலர் சாலையை ஆக்கிரமித்து மீண்டும் கடை வைத்துள்ளதாகக் கூறி, அதுதொடர்பான ஏராளமான புகைப்படங்களையும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்ற இணைப் பதிவாளரும், தலைமை நீதிபதியின் கூடுதல் தனிச் செயலாளருமான ஏ.அப்துல் பாக்கர், மனுதாரர் கூறும் இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு நிலவும் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, புகைப்படங்கள் எடுத்து, விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கு விசாரணையை 18 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com