ஆம்பூர் அருகே வனப் பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ஆம்பூர் அருகே காப்புக் காட்டில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி மத்தூர்கொல்லை பகுதியில் கானாற்றில் ஓடும் வெள்ளம்.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி மத்தூர்கொல்லை பகுதியில் கானாற்றில் ஓடும் வெள்ளம்.

ஆம்பூர் அருகே காப்புக் காட்டில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, மத்தூர்கொல்லை கிராமத்துக்கு மேற்கே காரப்பட்டு காப்புக் காடுகள் உள்ளன. இதையொட்டி தமிழக}ஆந்திர வனப் பகுதி எல்லையோரம் மாதகடப்பா மலை கிராமம் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலையின் சில பகுதிகளில் உயர்ந்த பாறைகள் மீதிருந்து தண்ணீர் விழுவது சிறிய நீர்வீழ்ச்சி போல் காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதியில் மிகுந்த ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது.
மாதகடப்பா மலைகளில் இருந்து வரும் தண்ணீர் நந்திசுனை பகுதி, தொட்டிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள பாறைகளின் மீது வழிந்தோடி வருவதும், வனத் துறையினர் ஆங்காங்கு கட்டியுள்ள தடுப்பணைகளில் நிரம்பி வழிந்தோடி வருவதும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
வறட்சியால் பொதுமக்களும், விலங்குகளும் தண்ணீருக்காக தவித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே வனப் பகுதியில் உள்ள நந்தீஸ்வரர் வழிபாட்டு தலத்தை புனரமைத்து, மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
தற்போது மழை பெய்து கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தண்ணீர் தேடி வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வராது என்றும் நிம்மதி அடைந்துள்ளனர்.
மழைக் காலங்களில் கானாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளநீர், தேக்கி வைக்கப்படாததால் வீணாகப் போகிறது. அதனால் நந்திச்சுனைக்கு அருகே தொட்டிப்பாறை பள்ளத்தாக்கு பகுதியில் அணை கட்டப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். தொட்டிப்பாறை அணை கட்டப்படுமானால் அரங்கல்துருகம், கதவாளம், பார்சனாப்பல்லி, மோதகப்பல்லி, கரும்பூர், வெங்கடசமுத்திரம், குமாரமங்கலம், வீராங்குப்பம், மேல்சாணாங்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, சின்னப்பள்ளிக்குப்பம், வடசேரி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 100}க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும்.
மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். இதுதவிர ஆம்பூர் பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் வனப் பகுதியில் சேதமடைந்த சிறிய தடுப்பணைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் ஆம்பூர் வனச்சரகத்தில் சாத்தியக்கூறுகள் உள்ள காரப்பட்டு காப்புக் காடுகளில் ஆங்காங்கே பல தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com