சென்னை குடிநீர் ஏரிகள்: கடந்த ஆண்டை விட 5 மடங்கு தண்ணீர் இருப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல் உள்ளிட்ட 4 ஏரிகளிலும் தற்போது 5. 25 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் (2016- டிச.7) 1.08 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருந்தது.
சென்னை குடிநீர் ஏரிகள்: கடந்த ஆண்டை விட 5 மடங்கு தண்ணீர் இருப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல் உள்ளிட்ட 4 ஏரிகளிலும் தற்போது 5. 25 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் (2016- டிச.7) 1.08 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருந்தது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11 டிஎம்சி. பருவமழை இல்லாததால் கடந்த ஜூலை 5-ஆம் தேதி 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 76 மில்லியன் கன அடி மட்டும் தண்ணீர் இருந்தது. இது ஒரு சதவீதத்துக்கும் குறைவான நீர் இருப்பாகும். இதையடுத்து கடந்த அக். 25-ஆம் தேதி வரை சென்னை முழுவதும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது. வடகிழக்குப் பருவமழை காரணமாக 4 ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வியாழக்கிழமை நிலவரப்படி அவற்றில் 5, 25 டிஎம்சி தண்ணீர் உள்ளது. 
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்திருந்ததால், இணைப்புக் கால்வாய் மூலம் தண்ணீர் எடுக்க முடியாமல், ஜெனரேட்டர் உதவியுடன் நீர் எடுக்கப்பட்டு சென்னையின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், இணைப்பு கால்வாய் மூலமே நீர் எடுக்கப்பட்டு வருகிறது. 
கோடையைச் சமாளிக்க முடியும்: குடிநீர் விநியோகத்துக்காக கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், விவசாயக் கிணறுகள் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டாலும் மொத்தத் தேவையில் 35 சதவீதம் தண்ணீர் புழல் உள்ளிட்ட 4 ஏரிகளிலிருந்துதான் எடுக்கப்படுகின்றது. தற்போது ஏறத்தாழ 50 சதவீதம் அளவுக்கு இருப்பு உள்ளதால் தினமும் 65 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் நாள்களிலும் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏரிகளில் இருப்பில் உள்ள 5.25 டிஎம்சி தண்ணீரைக் கொண்டு வரும் மே மாதம் வரை சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றனர். 

ஏரிகளின் நீர் இருப்பு (மொத்தக் கொள்ளளவு அடைப்புக் குறிக்குள், மில்லியன் கன அடியில்).

புழல் 1,690 (3300)
சோழவரம் 588 (1,081)
செம்பரம்பாக்கம் 1,904 (3,645)
பூண்டி 1,071 (3,231)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com